'எனக்கு பணமும் தந்து' பெண்களை கண்டபடி பேசும் காசி... வைரலான 'ஆடியோ'க்களை வெளியிட்டது யார்?... 'தீவிர' விசாரணை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாகர்கோவிலை சேர்ந்த காசி என்கிற சுஜி சமூக வலைதளங்கள் வழியாக பெண்களுடன் நெருங்கிப்பழகி அவர்களிடம் இருந்து பணம், நகைகளை பறித்ததாக புகார்கள் எழுந்தன. அது மட்டுமின்றி பெண்களை ஆபாசமாக பேசியது, அவர்களை ஆபாச படங்கள் காட்டி மிரட்டி பணம் பறித்தது போன்ற வழக்குகளும் இவர்மீது பதிவாகின. இதையடுத்து அவர்மீது குண்டர் சட்டம், போக்ஸோ சட்டம் பாய்ந்தது.

தற்போது இதுதொடர்பாக போலீசார் அவரது நெருங்கிய நண்பர் ஒருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் 2 நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் காசி பேசியதாக எடிட் செய்யப்பட்ட ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இளம்பெண்கள் உள்பட பல்வேறு நபர்களுடன் பேசுவது போன்று அந்த ஆடியோ உள்ளது. ஆனால் அதில் அவர் யாருடன் பேசுகிறார் என்ற விவரம் இல்லை. பெண்களை ஆபாசமாக பேசி மிரட்டுவதும், அவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதுமாக இருந்தது.
அதாவது, பெண்ணை நீ வேண்டுமானால் பயன்படுத்திக் கொள் என்று நண்பர்களிடம் பேசுவதும் அந்த ஆடியோவில் இடம் பெற்றுள்ளது. அதோடு அவர் கோபத்தில் பெண்களை தகாத வார்த்தையில் திட்டுவது போன்றும், 'எனக்கு பணமும் தந்து ரோட்டுக்கு வந்து இருக்கிறார்கள். நமக்காக அந்த அளவு அடிமையாக உள்ளார்கள்' என்று பேசுவது போலவும் ஆடியோ ஒலிபரப்பாகிறது. ஒவ்வொரு ஆடியோவிலும் காசி பேசுவது மட்டுமே இடம்பெற்றுள்ளது. இந்த ஆடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றன.
ஆனால் இவற்றை யார் வெளியிட்டது என தெரியவில்லை. இந்த வழக்கை திசை திருப்புவதற்காக இந்த ஆடியோக்களை வெளியிட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசார் மத்தியில் எழுந்துள்ளது. காசி பயன்படுத்திய மொபைல், லேப்டாப், ஹார்டு டிஸ்க் போன்றவை போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அப்படியிருக்க இந்த ஆடியோக்களை எடிட் செய்து வெளியிட்டது யார்? என்பது மர்மமாக உள்ளது. இதில் காசியின் நண்பர்கள் சம்பந்தப்பட்டு இருப்பார்களோ? என்ற சந்தேகத்தை அடுத்து போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
