விருப்பமுள்ளவர்கள் '2021 வரை' வீட்டிலிருந்தே 'வேலை' பார்க்கலாம்... 'பிரபல' நிறுவனங்கள் வெளியிட்டுள்ள 'அறிவிப்பு'...
முகப்பு > செய்திகள் > உலகம்கூகுள், ஃபேஸ்புக் நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்கள் இந்த ஆண்டு இறுதிவரை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்கப்போவதாக அறிவித்துள்ளன.

உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 லட்சத்தை கடந்துள்ள நிலையில், அவர்களில் 2.70 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதிலும் குறிப்பாக அமெரிக்கா கொரோனாவால் மிக மோசமான பாதிப்புகளை சந்தித்துவரும் நிலையில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பல்வேறு நிறுவனங்களும் ஜூன் மாதம் வரை தங்களுடைய ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு கூறியுள்ளன. இந்நிலையில் அங்கு கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாததால் அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், ஃபேஸ்புக் ஆகியவை இந்த ஆண்டு இறுதிவரை தங்களுடைய ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
முன்னதாக பேஸ்புக் நிறுவனம் ஜூலை 6ஆம் தேதி நிறுவனத்தை திறக்க முடிவு செய்திருந்த நிலையில் தற்போது ஊழியர்கள் விரும்பினால் இந்த ஆண்டு இறுதிவரை அவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என அறிவித்துள்ளது. மேலும் ஜூன் 1ஆம் தேதி வரை தங்களுடைய ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே வேலை செய்யுமாறு கூறியிருந்த கூகுள் நிறுவனம் தற்போது வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய முடியும் என்ற நிலையில் இருப்பவர்கள் இந்த ஆண்டு இறுதிவரை அவ்வாறே வேலை செய்யலாமென அறிவித்துள்ளது.
