‘எந்த போலீஸும் பயமா இருக்குனு வீட்ல இருக்கல’.. ‘அவங்கள நெனச்சா பெருமையா இருக்கு’.. சென்னை மாநகர காவல் ஆணையர் AK.VISWANATHAN சிறப்பு பேட்டி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | May 09, 2020 11:26 AM

சென்னை மாநகர காவல் ஆணையர் ஏகே.விஸ்வநாதன் கொரோனா ஊரடங்கு குறித்து Behindwoods சேனலுக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.

Chennai police commissioner AK Viswanathan exclusive interview

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இரவு பகலாக கடுமையாக பணியாற்றி வருகின்றனர். சென்னையை பொருத்தவரை கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பாதிப்புகள் அதிகம் இல்லாத பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டும் வருகின்றன.

இந்தநிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏகே.விஸ்வநாதன் Behindwoods சேனலுக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அதில், ‘மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், கார்ப்பரேஷன் அதிகாரிகள், வருவாய் அதிகாரிகள் உள்ளிட்டோர் கடுமையாக உழைக்கின்றனர். காவல்துறையினரும் அவர்களுடன் சேர்ந்து கடுமையாக பணியாற்றி வருகின்றனர். காவல்துறை பணி என்பது எப்போதும் களத்தில் இருப்பதுதான். அதனால் அவர்களுக்கு இயல்பாகவே களத்தில் இருக்கும் சூழ்நிலை உள்ளது. பல கஷ்டங்கள் இருக்கிறது. அது பொதுமக்களுக்கும் இருக்கு, அதிகாரிகளுக்கும் இருக்கு அதற்கு மத்தியில் மிக சிறப்பாக பணியாற்றி வருகிறோம்.

அரசாங்கம் நிறைய பாதுகாப்பு உபகரணங்கள் கொடுத்துள்ளது. சில தனிப்பட்ட நபர்களும் உதவி செய்துள்ளனர். காவல்துறையினரை பொறுத்தவரை எந்தவிதமாக தட்டுப்பாடும் இல்லாமல், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு சாதனங்களான மாஸ்க், சானிடைசர், க்ளைவுஸ் மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர், அதிமதுர குடிநீர் உள்ளிட்டவற்றை காவல்துறையினருக்கு மட்டுமில்லாமல் அவர்களது குடும்பத்தினருக்கும் வழங்கி இருக்கிறோம். கொரோனா பாதிக்கப்படும் காவலர்களுக்கு உடனடியான மருத்துவ சிகிச்சை அளிக்கபடுகிறது. பின் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தேவையான உதவிகள் செய்யப்படுகின்றன.

இது மிக கடினமான சூழ்நிலை. மற்றவர்களெல்லாம் நோய் தொற்று ஏற்படாமல் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனும்போது காவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள், வருவாய் அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டிய, அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய, அறிவுறை சொல்ல வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். அதற்கு அவர்களது குடும்ப ஒத்துழைப்பு ரொம்ப முக்கியம். எந்த காவல்துறை அதிகாரியும் எனக்கு பயமாக இருக்கு நான் போகமாட்டேன் என சொல்லவில்லை. சுகாதாரப் பணியாளர்கள், மாநகராட்சி அதிகாரிகள் யாருமே நான் போகமாட்டேன் என சொல்லவில்லை. அவர்களுக்கு கொடுத்த வேலையை மிக சிறப்பாக செய்து இருக்கிறார்கள். களத்தில் இறங்கி வேலை செய்துள்ளனர். அதனால் ஒரு சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் தொய்வோ, குறைவோ ஏற்படவில்லை. இதற்கு காவல்துறை அதிகாரிகளின் குடும்பம் கொடுக்கும் ஆதரவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதை நினைத்து பெருமைப் படுகிறேன். தற்போது சூழ்நிலை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து அரசாங்கம் முடிவெடுத்து சொல்லும். அந்த அறிவுரைகள் மக்களின் நலனுக்காகதான் என அவர்கள் புரிந்துகொண்டு செயல்படுனும். அரசுக்கு மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏகே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.