தேர்தல் முடிவுகள்: முதல் களமே அதகளம்.. வெற்றியை ருசித்த விஜய் மக்கள் இயக்கம்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுக்கோட்டை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதன் முதலில் தேர்தல் களம் கண்ட விஜய் மக்கள் இயக்கம் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது.வாக்குப்பதிவு முடிவில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.முறைகேடு புகார் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 7 வாக்குச்சாவடிகளில் நேற்று மறு வாக்குப்பதிவு நடந்தது. இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 279 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன. தபால் ஓட்டுகளை பிரித்து யாருக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது என்பது அனைத்து முகவர்களுக்கும் தெரியும் வகையில் காண்பிக்கப்படும். இதன்பின்பு, யாருக்கு அந்த ஓட்டு பதிவாகி உள்ளதோ அவரது கணக்கில் அந்த வாக்கு சேர்க்கப்படும். இதன்பின்பு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் இருந்து வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டுவரப்படும். பின்னர் கன்ட்ரோல் யூனிட்டில் இருக்கும் 'சீல்' வேட்பாளர்கள் முன்னிலையில் உடைக்கப்படும். இதைத்தொடர்ந்து கன்ட்ரோல் யூனிட்டில் சின்னம் வாரியாக பதிவான வாக்குகள் சேகரிக்கப்படும்.
இதுவே, ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கையாக கருதப்படும். மாநகராட்சி, நகராட்சியை பொறுத்தமட்டில் பெரும்பாலான வார்டுகளுக்கான தேர்தல் 40-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் நடைபெற்றதால் அதிகபட்சமாக 4 சுற்றுகள் வரை ஓட்டுகள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும். தற்போதைய நிலவரப்படி, மாநகராட்சிகளில் இதுவரை திமுக 4 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. வேலூரில் 2, ஈரோடு, கரூரில் தலா ஒரு மாநகராட்சி வார்டில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 18 நகராட்சிகளுக்கான முடிவுகள் இதுவரை வெளியாகி உள்ளது. நகராட்சிகளில் திமுக இதுவரை 15 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இத்தேர்தலில் முதன் முதலில் தேர்தல் களம் கண்ட விஜய் மக்கள் இயக்கம் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. புதுக்கோட்டை நகராட்சியில் 4-வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பர்வேஸ் 282 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்ற நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் கணிசமான வெற்றியை குவிப்பார்கள் என்ற நம்பிக்கை வீண் போகவில்லை.
மேலும், ராணிப்பேட்டை மாவட்டம் வாலஜாபேட்டை நகராட்சி 3வது வார்டிலும் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றுள்ளது. விஜய் நேரடி அரசியலுக்கு வராவிட்டாலும் தனது ரசிகர்களை களம் இறக்கி முன்னோட்ட அரசியலை நகர்த்தி வருகிறார். வெற்றியை ருசித்த நிலையில், #VijayMakkalyakkam என்ற ஹேஷ்டாக்கை விஜய் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.