"மனசாட்சி உள்ள எவரேனும் மதுரையை ஸ்மார்ட் சிட்டி என்றழைக்க முடியுமா?" மநீம தலைவர் கமல்ஹாசன் ஆவேசம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு, வரும் 19ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு ஜன., 26ல் வெளியானது. சமீபத்தில், தேர்தல் பரப்புரையில், சில தளர்வுகளை மாநில தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி, திறந்த வெளியில் 1,000 பேர் வரை பங்கேற்கும் வகையிலான பரப்புரை மேற்கொள்ளலாம்; 20 பேர் வரை வீடுதோறும் சென்று ஓட்டு சேகரிக்கலாம் என்று தெரிவித்தது.
களைகட்டும் பிரச்சாரம்
மாநிலம் முழுதும் தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகிறது. முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பரப்புரை செய்து வருகிறார். அதிமுக, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர், திருமண மண்டபங்களில் நடக்கும் பரப்புரை கூட்டங்களில் நேரடியாக பங்கேற்று வருகின்றனர். திமுக, கூட்டணி தலைவர்களும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளனர். தமிழக பாஜக, தலைவர் அண்ணாமலை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி, பிரசாரத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
மதுரையில் கமல்ஹாசன்
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று மதுரையில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கிராம பஞ்சாயத்து மக்கள் நீதி மய்யம் கண்டுபிடித்தது அல்ல. 25 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் மக்களுக்கு தெரியாத விஷயத்தை டார்ச் லைட் அடித்து காட்டியுள்ளது. மக்கள் அதிகாரத்தை அவர்களிடம் கொடுத்து விட்டால் வியாபாரம் கெட்டுவிடும் என்ற பயத்தினாலேயே அதை செய்யாமல் இருந்தனர்.
இலவசமாக சாக்கடை
நகர்ப்புற வார்டு சபைகளை அமைக்க வேண்டும் என்பதனையும் முதல் குரலாக வைத்துக் கொண்டிருக்கிறோம். குடிநீர் என்பது அத்தியாவசியம். இன்னும் 25 ஆண்டுகள் கடந்தால் சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் ஆகிவிடும், ஆனால் இன்னும் குடிநீர் முழுமையாக கிடைக்கவில்லை. எது இலவசமாக கிடைக்கிறதோ அதை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம். இங்கு இலவசமாக ஓடுவது சாக்கடை மட்டுமே. எல்லா இடங்களிலும் ஓடுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு கிராமங்களும் மாற வேண்டும்" என்று கடுமையாக சாடி பேசினார்.
மதுரை ஸ்மார்ட் சிட்டியா?
இந்நிலையில், சமூகவலைதள பக்கத்தில் கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். அதில், "மதுரை மாநகராட்சியின் ஆண்டு வருவாய் சுமார் 586 கோடி. ஆனால், அதற்குரிய நியாயமான வளர்ச்சிப்பணிகள் நிகழவே இல்லை. குடிநீர்ப் பிரச்னை, பாதாள சாக்கடைப் பிரச்னை, போக்குவரத்து நெரிசல், எங்கு பார்த்தாலும் குப்பை கூளங்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள். போர்க்களம் போலிருக்கிறது மதுரை. மனசாட்சி உள்ள எவரேனும், மதுரையை "ஸ்மார்ட் சிட்டி" என்றழைக்க முடியுமா? பண்பாட்டுப் பெருமிதம் மிக்க நகரத்தைக் கழக ஆட்சிகள் கைவிட்டு விட்டன. உள்ளாட்சித் தேர்தலில் வென்று மக்கள் பங்கேற்புடன் 'ஏரியா சபைகள்' அமைக்கப்பட்டு இந்தப் பிரச்னைகள் ஒவ்வொன்றாகத் தீர்க்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.