‘குழந்தைக்கு பால் வாங்க கூட வழியில்லை’.. ‘நெறைய கஷ்டத்தை பாத்திருக்கோம், ஆனா இது..!’.. செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் வேதனை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | May 01, 2020 11:32 AM

ஊரடங்கால் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் அத்தியாவசிய பொருள்கள் இல்லாமல் தவிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

Pudukkottai cobblers struggle for food during corona lockdown

புதுக்கோட்டை நகர பகுதிக்குட்பட்ட காந்திநகர் 6ம் வீதியில் உள்ள 70 குடும்பங்கள் செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகின்றனர். புதுக்கோட்டையில் உள்ள அண்ணா சிலை அருகே சாலையோரத்தில் செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபட்டு தினமும் கிடைக்கும் ரூ.100, ரூ.200 வருமானத்தை வைத்து வாழ்க்கையை நகர்த்தி வந்தனர். ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் அத்தியாவசிய பொருள்கள் கூட கிடைக்காமல் சிரமப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்த அவர்கள், காந்திநகர் பகுதியில் 70 குடும்பங்கள் செருப்பு தைக்கும் தொழிலை மட்டுமே நம்பி உள்ளோம். எங்களுக்கு வேறு ஏதும் தொழில் தெரியாது. வாழ்க்கையில் பல கஷ்டங்களை கடந்திருந்தாலும், தற்போது உள்ள ஊரடங்கு, இதுவரை கண்டிராத வறுமையை தந்துள்ளது. வீட்டில் குழந்தைகளை வைத்துக்கொண்டு ஒரு லிட்டர் பால் வாங்கக் கூட வழியின்றி தவித்து வருகின்றோம்.

அரசு கொடுத்த பத்து கிலோ அரிசியும், ஆயிரம் ரூபாய் பணத்தையும் வைத்து எவ்வளவு நாளைக்கு உணவு உண்ண முடியும். குடிப்பதற்கு தண்ணீர் கூட காசு கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எங்கள் நிலையை கருத்தில் கொண்டு தன்னார்வலர்களும், மாவட்ட நிர்வாகவும் எங்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும் என வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.