‘அப்பா கஷ்டப்படக்கூடாது’.. தினமும் 4 கிமீ தள்ளுவண்டி தள்ளும் 11 வயது சிறுமி.. நெகிழவைத்த பாசம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அப்பாவின் சிரமத்தை உணர்ந்து தினமும் அவருக்கு உதவியாக தள்ளுவண்டி தள்ளும் சிறுமியின் செயல் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மணி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தள்ளுவண்டி தள்ளி அதில் வரும் வருமானம் மூலம் குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது ஊரடங்கால் தள்ளுவண்டி வேலை அதிகம் இல்லாததால் வறுமை அவரை வாட்டி வருகிறது.
50 நாட்களை கடந்த நிலையில் தற்போது மத்திய அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனால் அவ்வப்போது ஊதுபத்தி, காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களை குடோனில் இருந்து கடைகளுக்கு தள்ளுவண்டி மூலம் மணி எடுத்துச்சென்று பிழைப்பு நடத்தி வருகிறார். இந்த நிலையில் தள்ளுவண்டியை தள்ள மிகவும் சிரமப்படும் தனது தந்தையின் நிலைமையை உணர்ந்த அவரது மகள் சுபபாரதி (11), அப்பாவின் சுமையை குறைக்கும் நோக்கில் தினமும் மாலை நேரத்தில் அவருக்கு உதவியாக தள்ளுவண்டியை தள்ளி வருகிறார்.
இதுகுறித்து தெரிவித்த சுபபாரதி, ‘நான் புதுக்கோட்டையில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறேன். என் அப்பா தள்ளுவண்டி மூலம் ஊதுபத்தி, காய்கறி உள்ளிட்ட பொருள்களை குடோனில் இருந்து கடைகளுக்கு சென்று கொடுப்பார். அதில் வரும் பணத்தை வீட்டுக்கு கொண்டுவந்து கொடுப்பார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால், அப்பா தள்ளுவண்டி தள்ள கஷ்டப்படக்கூடாது என்பதற்காக மாலையில் அப்பாவுக்கு உதவியாக இருக்கிறேன்’ என மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
மணி இதுதொடர்பாக கூறுகையில், ‘கடந்த 5 ஆண்டுகளாக தள்ளுவண்டி தள்ளி பிழைப்பு நடத்தி வருகிறேன். தற்போது கொரோனா ஊரடங்கால் ஒரு நாளைக்கு 200 ரூபாய் கூட வருமானம் இல்லை. இதனால் மிகவும் சிரமத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனக்கு தள்ளுவண்டி தள்ள சற்று சிரமமாக உள்ளதால் தினமும் மாலையில் என் மகள் என்னுடன் சேர்ந்து தள்ளுவண்டி தள்ளுகிறார். தினமும் 4 கிலோமீட்டர் என்னுடன் சேர்ந்து தள்ளுவண்டியை தள்ளி எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறார்’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
