‘அத பாத்ததும் மனசு ரொம்ப கஷ்டமாகிடுச்சு’.. ‘அவங்க திரும்ப வர வரைக்கும் நான் இத செய்யப்போறேன்’.. நெகிழவைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Apr 01, 2020 05:42 PM

அறந்தாங்கி அருகே மாணவர்கள் வளர்த்த செடிகள் வாடிவிடக்கூடாது என்பதற்காக பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் தினமும் தண்ணீர் ஊற்றி வரும் சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Pudukkottai government school staff maintain school trees in curfew

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தாந்தாணி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளி வளாகத்தை சுற்றிலும் மரக்கன்றுகள், பூச்செடிகள் நட்டு பராமரித்து வந்துள்ளனர். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதால் செடிகள் தண்ணீர் இல்லாமல் வாடி போயுள்ளது. இதனைக் கண்ட பள்ளி சத்துணவு அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் என்பவர் தினமும் பள்ளிக்கு சென்று தண்ணீர் ஊற்றி கருகிப்போக இருந்த செடிகளுக்கும் மீண்டும் உயிர் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த அவர், ‘இந்த பள்ளியில் 25 வருஷத்துக்கும் மேலாக வேலை பார்த்து வருகிறேன். இப்போ கொஞ்ச வருஷமாத்தான் ஆசிரியர்கள், மாணவர்களின் கடுமையான முயற்சியில் பள்ளி பூஞ்சோலையாக மாறி இருக்கிறது. மாணவர்கள் ஒருநாளும் தவறாம தண்ணீர் ஊத்திடுவாங்க. இப்போ பள்ளிக்கு லீவு விட்டதாலும், வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாலும் மாணவர்கள் தண்ணீர் ஊற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு வாரம் ஆகிபோச்சு, பள்ளிக்கூடத்தை பார்த்துட்டு வருமோம்னு போய் பார்த்தேன். மாணவர்கள் ஆசையா வளர்த்த செடிகள் எல்லாம் தண்ணீர் இல்லாம வாடி போயிருந்துச்சு. அதைப் பார்த்ததும் என் மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. உடனே ஆசிரியர்கிட்ட சொல்லிட்டு தினமும் நானே தண்ணீர் பாய்ச்சுட்டு இருக்கேன். திரும்ப வந்து பார்க்குறப்ப மாணவர்கள் மனம் கஷ்டப்படக்கூடாது. அதனால் மாணவர்கள் திரும்ப வர வரைக்கும் நானே தண்ணீர் ஊத்தலாம்னு முடிவு செஞ்சிருக்கேன்’ என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

News Credits: Vikatan

Tags : #CORONA #CORONAVIRUS #PUDUKKOTTAI #SCHOOL #TREES