வாங்கம்மா வாங்க... நடமாடும் பத்து ரூபாய் மளிகை கடை... இளைஞரின் அசத்தலான ஐடியா!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது காய்கறி-மளிகை கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இந்நிலையில், பொதுமக்கள் நலனுக்காக தமிழகம் முழுவதும் குடியிருப்பு பகுதிகள் நோக்கி அரசு அனுமதி பெற்ற நடமாடும் காய்கறி கடைகள் சென்றது.

அதன்படி குடியிருப்பு பகுதிகள் நோக்கி வரும் மளிகை கடை வாகனங்களில் மஞ்சள், உப்பு, சர்க்கரை, பொன்னி அரிசி, இட்லி அரிசி, துவரம் பருப்பு, கடலை பருப்பு, பாசி பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகாய் வத்தல், மல்லி, பூண்டு, புளி, ரவை, கோதுமை, சோப்பு, சீயக்காய், எண்ணெய் பாக்கெட்டுகள், மசாலா பாக்கெட்டுகள் என தேவையான மளிகை பொருட்கள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டது.
ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மக்கள் நேரடியாகவே மளிகை கடைக்கும், சந்தைகளுக்கு சென்று காய்கறிகள் வாங்கி வருகின்றனர். மலிவான விலையில் கிடைப்பது அரிதுதான் அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இளைஞர் குறைந்த விலையில் நிறைவான லாபத்தை பெற்று மக்களுக்கு உதவி செய்து வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கூத்தாடி வயல் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் சில வருடமாக தனது இருசக்கர வாகனத்தில் அறந்தாங்கி மற்றும் அதனை சுற்றியுள்ள ஆவுடையார்கோவில், மணமேல்குடி, நாகுடி உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருட்களை ரூ.10-க்கு விற்பனை செய்து வருகிறார்.
இருசக்கர வாகனம் முழுவதும் ஒரு மளிகை கடைக்கு தேவையான அனைத்து பொருட்களும் இருக்கின்றன. சிறிய ரேடியோவில் வாங்கம்மா வாங்க உங்க வீடு தேடி வந்திருக்கோம். ரூ.10 -க்கு மளிகை பொருட்கள் கிடைக்கும் என்று ஒலிக்க மக்களும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். அவரிடம் மளிகை பொருட்கள்,குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள், அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களும் உள்ளன.
இதுகுறித்து சரவணன் கூறியதாவது, "விலை குறைவாக இருந்தாலும் பொருட்கள் தரமாக கொடுத்து வருகிறேன். தேவைக்கு ஏற்ப பொருட்களை வாங்கி சென்று, நேரடியாக வீட்டுக்கே செல்வதால் வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வாங்குகின்றனர். காலையில் ஏழு மணிக்கு கிளம்பி அனைத்து பகுதிகளுக்கும் சுற்றிவிட்டு வீட்டுக்கு வர 7 மணி ஆகிடும். ஒரு நாளுக்கு ரூ.1000 வரை வியாபாரம் நடக்கும். செலவு போக ஒரு பொருளுக்கு ரூ.300 கிடைக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்
