'திடீரென இறந்த பெற்றோர்'... 'சாகும் போது அப்பா சொன்ன ரகசியம்'... '15 வருசத்துக்கு பிறகு சிறுமிக்கு தெரியவந்த உண்மை'... நெகிழ வைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Aug 15, 2020 11:50 AM

சினிமாவில் சில கற்பனை காட்சிகளை இயக்குநர்கள் கட்டமைப்பது உண்டு. அவை பார்ப்பதற்குச் சுவாரசியமாக இருக்கும். ஆனால் அதுபோன்ற சம்பவங்கள் நிஜ வாழ்க்கையில் நடக்கும் போது நிச்சயம் பெரிய ஆச்சரியத்தைக் கொடுக்கும். அந்த வகையில் சிறுமி ஒருவருக்கு நடந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pudukkottai : Adopted girl finds her parents after 15 years

புதுக்கோட்டையைச் சேர்ந்த சுப்பிரமணியன் தம்பதியரின் மகள் துர்கா தேவி. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுப்பிரமணியனும், அவரது மனைவியும் திடீரென மரணமடைந்தனர். இதனால் துர்காதேவியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி  எங்குச் செல்வது என்று தெரியாமல் தவித்து உள்ளார். இந்த சூழ்நிலையில் சுப்பிரமணியன் தான் இறப்பதற்கு முன்னால் துர்காதேவியை அழைத்து, தானும், தனது மனைவியும் உனது சொந்த அப்பா, அம்மா கிடையாது எனக் கூறியுள்ளார். இதைக்கேட்ட துர்கா தேவி அதிர்ச்சி அடைந்தார். பிறகு நடந்த விவரங்களைச் சுப்பிரமணியன் விவரித்தார்.

''புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே ராஜாளிபட்டியை சேர்ந்த குஞ்சன்- பிச்சையம்மாள் தம்பதிக்கு, திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு மருத்துவமனையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த குழந்தை தான் துர்கா தேவி. அப்போதைய சூழலில் உன்னை அவரது பெற்றோர்களால் வளர்க்க முடியாத சூழலால், நாங்கள் இருவரும் சேர்ந்து உன்னை முறைப்படி தத்தெடுத்து வளர்த்து வந்தோம்'' எனச் சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதைக் கேட்டு துர்கா தேவி சற்று அதிர்ச்சி அடைந்தாலும், தனது வளர்ப்புத் தாய், தந்தையர் இறந்த நிலையில், தன்னை பெற்றவர்களைக் கண்டுபிடித்து அவர்களிடம் சென்றுவிடலாம் என துர்கா தேவி முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து துர்காதேவி விராலிமலை காவல் நிலையத்தில் தனது உண்மையான தாய் தந்தையரைக் கண்டறிந்து தருமாறு உருக்கத்தோடு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆதரவற்று நிற்கும் சிறுமிக்கு உதவக் களத்தில் இறங்கிய  விராலிமலை காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் லலிதா பிரியதர்ஷினி, மற்றும் திருவேங்கடம் ஆகியோர், துர்கா தேவியின் பெற்றோரைத் தீவிரமாகத் தேடும் முயற்சியில் இறங்கினார்கள். இதையடுத்து ராஜாளிபட்டிசென்று துர்கா தேவியின் பெற்ற தாய் தந்தையரான பிச்சம்மாள் குஞ்சன் ஆகியோரை கண்டறிந்து அவர்களைக் காவல் நிலையம் வரவழைத்து, 15 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுக்குக் குழந்தையைத் தத்து கொடுத்த விவரம் குறித்துக் கேட்டறிந்தனர்.

Pudukkottai : Adopted girl finds her parents after 15 years

அவர்களும் தாங்கள் தத்துக் கொடுத்த நிகழ்வை போலீசாரிடம் கூறியுள்ளார்கள். அப்போது சிறுமியும் தனது பெற்றோரோடு செல்ல விரும்புவதை போலீசார் கூறியுள்ளார்கள். இதனையடுத்து துர்காதேவியை மீண்டும் அவரது பெற்ற பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். இதையடுத்து 15 ஆண்டுகளுக்கு முன்பு தத்து கொடுக்கப்பட்ட மகளை மீண்டும் பார்த்த மகிழ்ச்சியில் அவரது பெற்றோர்களும், வளர்ப்புத் தாய்-தந்தையை இழந்த சோகத்திலிருந்த துர்காதேவிக்கு மீண்டும் சொந்த தாய் தந்தை கிடைத்ததால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றார்.

நன்றாகப் படித்து வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வர வேண்டும் என, துர்கா தேவியை போலீசார் வாழ்த்தி, அவரது பெற்றோரோடு அனுப்பி வைத்தார்கள். ஆதரவற்று நின்ற சிறுமியை 15 வருடங்களுக்குப் பிறகு அவரது பெற்றோரோடு சேர்த்து வைத்த காவல்துறையினரின் மனிதநேயமிக்க செயல் அந்த பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Pudukkottai : Adopted girl finds her parents after 15 years | Tamil Nadu News.