‘நீதிமன்றத்தில் கையெழுத்திட வந்த இளைஞர்’... ‘மனைவி, மகன் கண்முன்னே நடந்த பயங்கரம்’... 'நெல்லையில் பரபரப்பு சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 24, 2020 12:07 AM

நெல்லை பாளையங்கோட்டையில் இன்று பட்டப்பகலில் பழிக்குப்பழியாக மனைவி மற்றும் மகன் கண்முன்னே இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Man Killed by 4 member mob in front of Wife and Son

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள பாலாமடை இந்திரா நகரை சேர்ந்தவர் முருகானந்தம் (29), கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிச்சம்மாள் (25). இவர்களுக்கு சுவேதா (7) என்ற மகளும், வலதி (5) என்ற மகனும் உள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி ராஜவல்லிபுரத்தில் மணல் அள்ளுவது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த பால்துரை (20) என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார். அந்த வழக்கில் முருகானந்தம் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

கொலை வழக்கு தொடர்பாக நெல்லை நீதிமன்றத்தில் கையொப்பமிட்டு வரும் முருகானந்தம், இன்று வழக்கம்போல வந்திருக்கிறார். அவரின் மனைவிக்கு பல்வலி இருந்ததால் நீதிமன்றத்துக்குச் சென்ற பின்னர் மருத்துவரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். அதனால் மனைவி மற்றும் மகனும் பைக்கில் உடன் வந்திருக்கிறார்கள். கொலை செய்யப்பட்ட முருகானந்தம் நீதிமன்றத்தில் கையொப்பமிடச் சென்றபோது நீதிமன்ற வாயிலில், கொரோனா பாதிப்பு காரணமாக யாரும் நீதிமன்றத்துக்கு வரவேண்டாம் என அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது.

அதைப் பார்த்ததும் அங்கிருந்து மருத்துவரைச் சந்திப்பதற்காக பாளையங்கோட்டை சமாதானபுரம் சென்றுள்ளார். பாளையங்கோட்டை மகளிர் காவல்நிலையத்துக்குப் பின்புறம் உள்ள பல் மருத்துவமனைக்குச் சென்றபோது அவர்களை நோட்டமிட்ட நான்கு பேர் கொண்ட கும்பல், பைக்கில் சென்றுகொண்டிருந்த முருகானந்தம் மீது மோதியுள்ளது. அவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

அவர்கள் 3 பேரும் எழுந்து சுதாரிப்பதற்குள், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அந்தக் கும்பல் முருகானந்தத்தை சரமாரியாக வெட்டியுள்ளது. மனைவி மற்றும் மகன் கண் எதிரே நடந்த இந்தக் கொடூரச் சம்பவத்தில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகனுக்கும் வெட்டு விழுந்தது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பால்துரை கொலை செய்யப்பட்ட வழக்கில் எதிர் தரப்பினர் முருகானந்தத்தை கோர்ட்டுக்கு வரும் போது கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதை அறிந்த அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். எனினும் பிடிவாரண்டு பிறப்பித்ததையடுத்து கோர்ட்டில் கையெழுத்திட வந்தார். இதை அறிந்த எதிர் தரப்பினர் முருகானந்தத்தை பழிக்குப்பழியாக கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.