“நம்ம வீட்லயே தங்கிக்க மச்சான்!“.. தம்பி முறை உறவினருடன் கள்ளக்காதல்.. காதல் மனைவியின் செயலால் கணவர் எடுத்த விபரீத முடிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள சோ.குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 30 வயது நபர் கருணாகரன். இவருடைய மனைவி 25 வயதான வைத்தீஸ்வரி. வைத்தீஸ்வரிக்கு 15 வயது இருக்கும்போது அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் கருணாகரன். இவர்களின் திருமணத்துக்கு பின்னர் இருவரும் சென்னை மதுரவாயல் ஏரிக்கரையில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். கருணாகரன் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகளும் 6 மாத ஆண் குழந்தையும் இருக்கும் நிலையில் கருணாகரனின் சொந்த கிராமமான குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான ஏழுமலை சென்னையில் தண்ணீர் லாரி ஓட்டுநராக பணிக்கு சேர்ந்தார்.
இந்த ஏழுமலை கருணாகரனுக்கு மைத்துனன் முறையும் வைத்தீஸ்வரி தம்பி முறையும் உடையவராக கூறப்படுகிறது. சென்னையில் தங்கி வேலை பார்க்க வந்த ஏழுமலை சென்னையில் தங்குவதற்கு வீடு இல்லாமல் தவித்துள்ளதாக தெரிகிறது. அதனால் பரிதாபப்பட்டு கருணாகரன் 8 மாதங்களுக்கு முன்பாக ஏழுமலையை தனது வீட்டிலேயே தங்க அனுமதித்துள்ளார். அதன்பிறகு வைத்தீஸ்வரியிடம் கொஞ்சம் கொஞ்சமாக பழகத் தொடங்கிய ஏழுமலை, அவரிடம் பேசி திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கடந்த நவம்பர் மாதம் 17ஆம் தேதி மதுரைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து மதுரவாயல் போலீசாரிடம் கருணாகரன் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து மதுரவாயல் போலீஸார் மற்றும் மதுரை போலீசார் செய்த விசாரணைக்கு பின், வைத்தீஸ்வரியை சமாதானப்படுத்தி கணவருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
பின்னர் கருணாகரன் தனது சொந்த கிராமத்திற்கு மனைவியை அழைத்துச் சென்று குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 9ம் தேதி சோ.குப்பம் கிராமத்தில் தைப்பூசத் திருவிழா நடந்தது. இந்த திருவிழாவுக்கு வந்த ஏழுமலை மீண்டும் வைத்தீஸ்வரியிடம் பேசி அவருடைய மனதை மாற்றி 2-வது முறையாக தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த கருணாகரன், ஏழுமலை மீது சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
எனினும் தொடர் மன உளைச்சலுக்கு ஆளான கருணாகரன் பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரின் இந்த பரிதாப கதியை பார்த்து அவரது தாயார் அமராவதியும் மீதமிருந்த மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அதன் பின்னர் இருவரும் காப்பாற்றப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கருணாகரனின் 6 மாத கைக்குழந்தை உட்பட 4 குழந்தைகளும் தவித்து வருகின்றனர். தனது மைத்துனரிடம் இருந்து தனது மனைவியை மீட்டுத் தருமாறு கணவன் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.