'ஹலோ.. இது சென்ட்ரல் கவர்மெண்ட் சார்!'... சுங்கச் சாவடியில் நடந்த பரபரப்பு சம்பவம்.. பரவி வரும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Oct 04, 2019 01:30 PM
சுங்கச் சாவடியில், புகார் பதிவேடு தமிழில் இல்லை எனச் சொல்லி வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளதோடு, சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாத்தூர் சுங்கச் சாவடியில் நடந்த இந்த வாக்குவாதம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டதை அடுத்து, தற்போது சமூக வலைதளங்களின் மூலம் பரவி வருகிறது. இந்த சம்பவத்தில் வாகன ஓட்டிகள் சுங்கச் சாவடி ஊழியர்களிடம் பேசும்போது, புகார் பதிவேடு தமிழில் இல்லாமல், ஆங்கிலத்தில் இருந்ததால், தங்களது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
சுங்க ஊழியர்களிடம் பேசிய வாகன ஓட்டி ஒருவர், ‘எங்க மொழியில குடுத்தாதானே நாங்க புகார் எழுத முடியும்? இங்கிலீஷ் புத்தகத்தைக் கொடுத்தால் எப்படி எழுதுறது?’ என்று கேட்க, அதற்கு சுங்க ஊழியரோ, ‘இது ஒன்னும் மாநில அரசு அல்ல, மத்திய அரசு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது’ என்றும் ‘புகார் பதிவேட்டினை எல்லாம் படித்து பார்க்காமல் உங்கள் புகாரை மட்டும் எழுதி கையெழுத்து போட்டுவிட்டு செல்லுங்கள்’ என்கிறார்.
ஆனால் ‘எங்க மொழியில குடுத்தாதானே எழுத முடியும்?’ என மீண்டும் வாகன ஓட்டி உரக்கக் கேட்கிறார். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது குறுக்கிட்ட வேற்று மாநிலத்தவரிடம், தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்த வாகன ஓட்டி ‘நீங்க பேசாதீங்க’ என்று கூறியதோடு, ‘பூறா இந்திக்காரர்களை பணிக்கு எடுத்து வைத்திருக்கிறீகள்’ என்றும் சுங்க ஊழியர்களிடம் அவர் குற்றம் சாட்டுகிறார். அதற்கு சுங்க ஊழியர், ‘ஏன்.. நீங்கள் காண்ட்ராக்டர் எடுங்களேன். நம்ம ஆட்களை வேலைக்கு வைங்களேன்’ என்று பதில் பேசுகிறார்.
அதன் பிறகு அந்த புகார் புத்தகத்தில் இருக்கும் ஆங்கில வார்த்தைகளுக்கான அர்த்தங்களைச் சொல்லச் சொல்லி ஊழியர்களிடம் வாகன ஓட்டிகள் கேட்கின்றனர். ஆனால் ஊழியர்களுக்கு அர்த்தம் தெரியவில்லை எனத் தெரிகிறது. முடிவாக, அந்தந்த மாநிலங்களில் மாநில மொழிகளுக்குதான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். அதற்கு பதில் அளித்த சுங்க அதிகாரிகள் கர்நாடகாவிற்கு சென்று, அங்கு பெயர்ப்பலகைகள், புகார் புத்தகங்கள் உட்பட எல்லாம் அந்த மொழியில்தான்(கன்னட மொழி) இருக்க வேண்டும் என்றால், அங்கு எப்படி நீங்கள் உங்கள் புகாரை எழுதுவீர்கள்? என்று ஊழியர்கள் கேட்கின்றனர்.
ஆனால் ‘நாங்க எதற்கு அங்கு போய் எழுத வேண்டும்.? அப்படியே சென்றாலும் வாய்மூடி பேசாமல்தான் இருப்போம். அதே போல் அவர்கள் தமிழ்நாட்டில் வருவதற்காக தமிழ்நாட்டில் புகார்ப்புத்தகங்கள் வேற்றுமொழியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று வாகன ஓட்டி விடாமல் மல்லுக்கட்டுகின்றனர்.
சுங்கச் சாவடியில் புகார்ப்புத்தகம் தமிழில் அல்லாமல், உலகப் பொதுமொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆங்கிலத்தில் இருந்ததற்காக, வாகன ஓட்டிகள் சுங்க ஊழியர்களிடம் வாதம் செய்துள்ள இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
