'கிட்ட வந்தா பெட்ரோல் ஊத்தி கொளுத்திப்பேன்.. நாட்டு வெடிகுண்டுடன் இளைஞர் செய்த காரியம்.. பதறவைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Sep 22, 2019 11:35 AM
கழுத்தில் நாட்டு வெடிகுண்டு, உடலில் பெட்ரோல் கோலம் சகிதம் நெய்வேலி அருகே மணிகண்டன் என்கிற இளைஞர் ஒருவர், தன்னை தனது மனைவியுடன் சேர்த்து வைக்கக் கோரி, மனைவியின் வீட்டு முன்னால் நின்று மாமியாருடன் வாக்குவாதம் செய்துள்ளார்.

அந்த சமயம், மணிகண்டனின் மாமியார் தெருவில் சென்று கூச்சலிட, அப்போது அந்த வழியாக வந்த நெய்வேலி நகர முதன்மை காவலர் பாலச்சந்திரன்,என்ன நடந்தது என கேள்விப்பட்டதுமே, அந்த வீட்டினுள் சென்று, மணிகண்டனிடம் ‘சொன்னா கேளுடா தம்பி.. எதுவா இருந்தாலும் உன் பிரச்சனையை டிஎஸ்பியிடம் பேசி நான் சரி பண்றேன். நீ இப்படியே என்னுடன் வா.. தவறான முடிவுகளை எடுக்காதே..’ என்று நம்பிக்கை வார்த்தைகளைக் கூறினார்.
ஆனாலும் மணிகண்டன், பிடிவாதமாக தான் தற்கொலை செய்வதில் உறுதியாக இருந்தார். மேலும் போலீஸ் அதிகாரியிடம், ‘சார்... கிட்ட வராதீங்க.. நான் பெட்ரோலை ஊத்திக்குவேன்.. ஆம்பளைங்கலாம் பாவம் சார்.. ’ என்றெல்லாம் பேசத் தொடங்குகிறார். இதனிடையே காவலர் பாலச்சந்திரன் நெய்வேலி நகர காவல் நிலைய தலைமை காவலர் சங்கர் மற்றும் காவலர் ராஜி உள்ளிட்டோருக்கும், தகவல் அளிக்க, அவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் பாலச்சந்திரனுடன் சேர்ந்து மணிகண்டனிடம் சாதூரியமாக பேசி, இறுதியில் மணிகண்டனின் குழந்தையைத் தூக்கிக்கொண்டு, ‘உனக்கு ஒரு குழந்தை இருக்கு.. உன் குழந்தையைப் பாரு’ என்று கூறிக்கொண்டே மணிகண்டனிடம் பாலச்சந்திரன் நெருங்குகிறார். அப்போதுதான் தற்கொலை முயற்சியை மணிகண்டன் கைவிடுகிறார்.
ஆனாலும் அதன்பின்னர் மணிகண்டன், தான் விஷம் அருந்தியதாகக் கூற, அதிர்ச்சி அடைந்த காவலர்கள், மணிகண்டனை என்.எல்.சி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். காவலர் பாலச்சந்திரனின் சமயோஜிதமான முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
