‘சிறுபிள்ளைகள் விவசாயம் வீடு வந்து சேராதா?’.. ‘செஞ்சிருவோம்!’.. ‘178 நாட்களில் சாதித்த மாணவர்கள்!’

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 19, 2020 04:48 PM

கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்தில் உள்ளது இடையப்பட்டி கிராமம்.. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொன்னுசாமி. இயற்கை மீது தீராத காதல் கொண்ட பொன்னுசாமி இயற்கை வேளாண் விஞ்ஞானி என்று கூறப்படும் நம்மாழ்வாரின் மீது மிகுந்த மரியாதை உள்ளவர்.

TN Govt School students does organic forming in 178 days

இவர் தன் பள்ளியில் பயிலும் மாணவர்களையும் நம்மாழ்வார் நினைவு நாள் நிகழ்வுகளை காண்பதற்காக அழைத்துச் சென்று அவர்களுக்குள்ளும் இயற்கை மீதான ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறார்.  ‌‌அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மாணவரும் தத்தம் வீட்டில் இயற்கை முறையில் காய்கறி தோட்டம் அமைக்கவும், மாணவர்கள் தமது பாரம்பரிய விதைகளின் மேன்மையை உணரவும் வைத்திருக்கிறார் பொன்னுசாமி.

அதோடு நிற்காமல் பள்ளியில் காலியாக இருந்த 100அடி சதுர இடத்தில் 178 நாட்களுக்கு முன்பு மாணவர்களை கொண்டு உழுது ஏற்கனவே தயார் நிலையில் இருந்த மாப்பிள்ளை சம்பா நாற்றுகளை நட வைத்து 178 நாட்களாக, நடவு செய்யப்பட்ட இடத்தை, கண்ணும் கருத்துமாக மாணவர்களைக் கொண்டே கவனித்து வந்துள்ளார்.

மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளியிலிருந்து வீணாகும் தண்ணீரை அந்த பயிர்களுக்கு மடைமாற்றி, இயற்கை முறையில் இலை மற்றும் சருகுகளை மட்டுமே  உரமாகப் போட்டும் களைகளை பறித்தும், ரசாயனம் மற்றும் பூச்சிகள் எதுவும் தாக்காதபடி மாப்பிள்ளை சம்பா நெற்பயிர்களை வளர்த்து தலைமையாசிரியர் பொன்னுசாமி மற்றும் கிராம மக்களின் முன்னிலையில் அறுவடைத் திருவிழாவாக கொண்டாடி தாங்கள் விதைத்த நெற்பயிர்களை தங்கள் கைகளாலேயே அறுவடை செய்தனர்.

பின்னர் நெற்கதிர்களை சிறிய அளவிலான கட்டுகளாக கட்டி மாணவர்களே தங்கள் தலையில் சுமந்து கொண்டு வந்து பள்ளியில் அடுக்கி வைத்து நெல்லை வைக்கோலில் இருந்து தனியாக பிரித்து முற்றத்தில் வைத்து புடைத்து அதில் இருந்த கருக்காவை அப்புறப்படுத்தினர். இறுதியில் 5 கிலோ நெல் கிடைத்ததை அடுத்து, ‘நாங்க இயற்கை விவசாயத்தில் ஜெயிச்சிட்டோம்’என்று உற்சாகமாக கூறினர்.

இதுபற்றி பேசிய தலைமையாசிரியர் பொன்னுசாமி மாணவர்களுக்கு வெறுமனே ஏட்டுக் கல்வியை மட்டும் கற்றுக் கொடுக்காமல் இதுபோன்ற வாழ்வில் கல்வியையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நினைத்துதான் இதைத் தொடர்ந்து செய்து வருவதாகவும், சிறுபிள்ளை செய்த விவசாயம் வீடு வந்து சேராது என்று பெரியோர்கள் சொன்ன பழமொழியை உடைத்து தங்கள் பிள்ளைகள் விவசாயம் செய்தது வெற்றி அடைந்து விட்டது என்றும் 5 கிலோ வரை நெல் கிடைத்துவிட்டது என்றும் அதில் கொஞ்சம் விதைநெல் எடுத்துக்கொண்டு மீதி உள்ள நெல்லை அரிசியாக்கி அதில் சக்கரை பொங்கல் செய்து மாணவர்களுக்கு கொடுக்கவிருப்பதாகவும் மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

Tags : #TEACHER #SCHOOL #STUDENTS #ORGANIC #FORMING