தமிழகத்தில் 4 நாட்களில் ரூ.639 கோடிக்கு மது விற்பனை.. கதறும் டாஸ்மாக் வாடிக்கையாளர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Apr 17, 2019 03:27 PM
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறையை அடுத்து, 4 நாட்களில் சுமார் 639 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ கடைகளில் நாளொன்றுக்கு சராசரியாக ரூ.80 கோடி முதல் ரூ.90 கோடி வரை மது விற்பனை நடைபெறுவது வழக்கம். தற்போது தேர்தல் காலம் என்பதால் மது விற்பனை அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த 12-ந்தேதி ரூ.117 கோடி, 13-ந்தேதி ரூ.141 கோடி, 14-ந்தேதி தமிழ் புத்தாண்டு அன்று ரூ.165 கோடி என்று மது விற்பனை. அன்றாடம் ரூ.100 கோடியை தாண்டி விற்பனையாகி இருக்கிறது.
இந்தநிலையில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு, 16 -ந் தேதி முதல் 18 -ந் தேதி வரை 3 நாட்கள் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 15 -ந் தேதி இரவு, ‘டாஸ்மாக்’ கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது. 3 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை போட்டி, போட்டு மதுபிரியர்கள் வாங்கி சென்றனர். இதனால் அன்றைய தினம் மட்டும் ரூ.216 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
இதுகுறித்து ‘டாஸ்மாக்’ அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.639 கோடி அளவுக்கு மது விற்பனை நடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் ரூ.139 கோடி, சென்னையில் ரூ.136 கோடி, திருச்சி ரூ.133 கோடி, சேலம் ரூ.120 கோடி, கோவை ரூ.111 கோடி என மது விற்பனையாகி உள்ளது’ என்றார்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த செந்தாமரை மற்றும் நேரு நகரை சேர்ந்த சின்னதாய் ஆகிய இருவரும் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ளத்தனமாக மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையெடுத்து அங்கு சென்ற ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார், அங்கு மறைத்து வைத்திருந்த 742 மது பாட்டில்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்த பாட்டில்களின் மதிப்பு சுமார் ஒரு லட்ச ரூபாய் என போலீசார் தெரிவித்தனர்.
‘டாஸ்மாக்’ கடைகளுக்கு தொடர் விடுமுறையால், கள்ளச்சந்தையில் எங்கேயாவது மதுபானங்கள் விற்பனை நடக்கிறதா? என்பது குறித்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் டாஸ்மாக் விடுமுறை குறித்து, மது பிரியர்கள் கூறுவதை இங்கேக் காணலாம்
