டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை... தேர்தலையொட்டி அரசு நடவடிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Apr 05, 2019 12:14 PM
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலை ஒட்டி தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாட்களில் மதுபானக் கடைகளை திறக்கக் கூடாது என தேர்தல் ஆணையம், அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து தமிழகத்தின் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ்குமார், தமிழகத்தில் ஏப்ரல் 16, 17, 18 மற்றும் மே 23 ஆகிய 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் வருகிற 18-ஆம் தேதி, மக்களவை மற்றும் 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மே 23 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இந்நிலையில், ஏப்ரல் 16 ஆம் தேதி காலை 10 மணிமுதல், ஏப்ரல் 18-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மதுபான விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது. இதேபோல், மே மாதம் 23 ஆம் தேதியும் டாஸ்மாக் கடை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கையாக, வாக்குப்பதிவு நடக்கும் நாட்களுக்கு, 2 நாட்கள் முன்பாகவே, டாஸ்மாக் கடைகள் மற்றும் அதோடு இணைக்கப்பட்டுள்ள பார்களும் மூடப்படுகிறது. மேலும், அசம்பாவிதங்களை தவிர்க்க, வாக்கு எண்ணிக்கை நாளிலும் மதுபானக் கடைகள் அடைக்கப்படுகின்றன. வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாட்களில் மதுபானம் உற்பத்தி செய்யவோ, விற்கவோ மற்றும் எடுத்துச் செல்லவோ கூடாது என்று கிர்லோஷ்குமார் கூறியுள்ளார்.
