மின்சாரம் தாக்கி யானை பலி.. மின்வேலிகளால் தொடரும் ஆபத்து!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Apr 23, 2019 01:00 PM
கோவையில் ஆண் யானை பாக்குமரத்தை உடைத்துத் தள்ளும்போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட, நெல்லித்துறை காப்புக்காடு எல்லையில் இருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ள ராணிமகால்காரர் பாக்குத் தோட்டத்தில் இன்று அதிகாலையில், வயது முதிர்ந்த ஆண் யானை பாக்குமரத்தை உடைத்துத் தள்ள முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த உடைந்த பாக்கு மரம், தோட்டத்தை ஒட்டிச் சென்ற மின்கம்பி மேல் விழுந்துள்ளது.
அந்த மரத்தை யானை கீழே அழுத்தியபோது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே யானை பரிதாபமாக பலியானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வன சரகர் மற்றும் பணியாளர்கள் யானையின் மரணம் குறித்து தணிக்கை செய்தனர். பின்னர், கால்நடை மருத்துவர்களை கொண்டு, தன்னார்வ நிறுவனங்கள் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
'கடந்த இரண்டாம் தேதிதான் சிறுமுகையில் ஓர் ஆண் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. அதற்குள், சிறுமுகைக்கு அருகிலேயே மீண்டும் ஒரு ஆண் யானை மின்வேலியில் மரத்துடன் சேர்ந்து சிக்கியதால் உயிரிழந்துள்ளது. மின்வேலிகள், யானைகளுக்கு பேராபத்தாக சத்தமின்றி உருமாறிக்கொண்டிருக்கிறது. இதனைத் தடுக்க மசினகுடியிலிருப்பது போலவே அனைத்து மின்வேலிகளும் சூரிய சக்தியில் இயங்குவதாக இருக்க வேண்டும்' என்று காட்டுயிர் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.