'நெல்லை மக்களை குறி வைக்கும் கொரோனா வைரஸ்...' 'வெளிநாட்டிலிருந்து வந்தவரால் மீண்டும் பரபரப்பு...' தீவிர கண்காணிப்பில் 103 பேர்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மீண்டும் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் துபாயிலிருந்து வந்துள்ளார் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்.

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த கணேஷ்குமார் (27) கடந்த சில வருடங்களாக துபாயில் பணிபுரிந்து கடந்த 7 ஆம் தேதி தமிழகத்தை வந்தடைந்துள்ளார். வீடு திரும்பிய இரு தினங்களில் கடும் காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டு அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், கணேஷ் துபாயிலிருந்து வந்துள்ளதால் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்குமோ என சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் கணேஷ் குமாரை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று காலையில் அனுப்பி வைத்துள்ளனர். தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு அவருடைய சளி, உமிழ்நீர் மற்றும் ரத்தம் ஆகியவற்றின் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சுகாதார துறை சேர்ந்த அதிகாரிகள் கணேஷ் குமார் குடியிருக்கும் பகுதி மக்களுக்கு வைரஸ் குறித்து விழிப்புணர்வு அளித்து வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 13 பேருக்கு தொடர் காய்ச்சல், சளி, இருமல் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையின் மூலம் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
அதை தொடர்ந்து நெல்லையில் இருவரும், தென்காசியில் 51 பேரும், தூத்துக்குடியில் 50 பேரும் என 103 பேர் சுகாதாரத்துறையின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்ந்து 28 நாட்களுக்கு கண்காணிக்கப்படுவர் என சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் குறித்து தமிழக சுகாதாரத்துறைக்கு நெல்லை கலெக்டர் ஷில்பா அறிக்கை அனுப்பியுள்ளார்.
இதற்கு முன் பிப்ரவரி 27 ஆம் தேதி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்து ஓமன் நாட்டில் இருந்து தமிழகம் வந்தடைந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபர், தற்போது குணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
