உங்களுக்கு 'கொரோனா' இருக்கா இல்லையா..? அரை மணி நேரத்துல 'கரெக்ட்டா' சொல்லிடும்...! இனிமேல் வைத்தியம் பார்க்க போறதும் ஆன்லைன்ல தான்...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Feb 04, 2020 08:28 AM

சீனாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பணியில் செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence) மற்றும் 5ஜி தொழில்நுட்பங்கள் பெரிதும் உதவுகின்றன.

AI and 5G work of controling corona virus in china

கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கவும், மேற்கொண்டு வைரஸ் பரவாமல் தடுக்கவும் சீனா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் 5ஜி தொழில்நுட்பங்கள் பெரிய அளவில் அதற்கு உதவி செய்து வருகின்றன. சீனாவின் ஆன்லைன் வர்த்தக நிறுவனர் ஜேக் மாவின் அலிபாபா நிறுவனம், வைரஸ் தொடர்பான ஆய்வுப் பணிகளுக்கும் மருந்து கண்டுபிடிக்கத் தேவையான ஆராய்ச்சிகளுக்கும் தேவையான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வழங்கத் தயார் என அறிவித்தது.

அந்த  வகையில் அலிபாபா நிறுவனத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், கொரோனா வைரஸின் மரபணுவை விரிவாக பிரித்தரிய உதவுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் உதவியால் ஒரு நபருக்கு வைரஸ் தொற்று இருக்கிறதா இல்லையா என்பதை அரைமணி நேரத்தில் கண்டறிய முடியும். பழைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தினால் பல மணி நேரத்திற்கு பிறகே ஒருவருக்கு தொற்று இருக்கிறதா என்பதை அறிய முடியும்‌ என்ற நிலையில், செயற்கை நுண்ணறிவு அதனை அரைமணி நேரமா‌க குறைத்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மற்றொரு சிறப்பு, அதிகளவிலான தரவுகளை எளிதில் கையாளும் என்பதுதான். உதாரணமாக ஒரு நகரில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்குள் எத்தனை பேர் எந்தெந்த நகரங்களுக்கு பயணித்தனர் என்ற தரவுகளை கொண்டே, எங்கெல்லாம் அதிகளவில் வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது? எந்தப் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற ‌கணிப்பினை துல்லியமாக வெளியிடும்.

அடுத்ததாக 5 ஜி தொழில்நுட்பம் மூலம் மக்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தே வீடியோ காலிங் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் மூலமாக மருத்துவர்களை தொடர்பு கொள்கின்றனர். வைரஸ் தொற்று ஏற்படாத நபர், சந்தேகத்தின் பேரில் மருத்துவமனைக்கு செல்லும்போது மற்றவர்களிடம் இருந்து பரவ வாய்ப்புள்ளது. ஆனால் 5ஜி தொழில்நுட்பம் இவர்களுக்கு ஆன்லைனிலேயே மருத்துவ சிகிச்சையை வழங்குகிறது. மருத்துவர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்கவும் 5ஜி தொழில்நுட்பம் உதவுகிறது.

Tags : #CORONOVIRUS #ARTIFICIALINTELLIGENCE #5G