பர்ஸ்ட் 'இண்டெர்நெட்ல' பாப்போம்... அப்புறம் 'பிளைட்' புடிச்சு வந்து... கோயம்புத்தூர் கோயில் 'திருவிழாவில்' சிக்கிய பெண்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Mar 07, 2020 09:23 PM

கோயம்புத்தூர் கோயில் திருவிழாவில் பெண்களிடம் நகை திருடிய மூவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Three Womens Arrested in Coimbatore for theft case

கோவை கோனியம்மன் கோயில் திருவிழா கடந்த 4-ம் தேதி நடைபெற்றது. தேரோட்டத்தின் போது அங்கு கூடியிருந்த பெண்களிடம் இருந்து சுமார் 35 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் தேர் சென்ற வழியில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆராய்ந்தனர்.

அப்போது அங்கு மூன்று பெண்கள் சுற்றிச்சுற்றி வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதை வைத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட திருச்சூரை சேர்ந்த இந்துமதி(27), இலங்கையை சேர்ந்த பராசக்தி(36) மற்றும் லண்டனை சேர்ந்த செல்வி(36) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 20 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், '' நாங்கள் மூவரும் அக்கா, தங்கைகள் முறை. இணையத்தில் இந்தியா முழுவதும் எங்கு திருவிழா நடைபெறுகிறது என்று பார்ப்போம். பின்னர் பிளைட் பிடித்து அந்த இடத்திற்கு சென்று அங்கு நோட்டமிடுவோம். பின்னர் திருவிழா நடைபெறும்போது கூட்டத்திற்குள் புகுந்து நகைகளை பறித்து விட்டு அவரவர்கள் வீட்டிற்கு சென்று விடுவோம்.

இதுபோல இந்தியா முழுவதும் கூட்டத்திற்குள் புகுந்து எங்கள் கைவரிசையை காட்டி இருக்கிறோம். கடந்த மாதம் நடைபெற்ற தஞ்சாவூர் கோயிலிலும் கூட்டத்திற்குள் புகுந்து நகைகளை திருடினோம். கோயம்புத்தூர் கோனியம்மன் திருவிழாவில் திருடிய போது மாட்டிக்கொண்டோம்,'' என தெரிவித்து இருக்கின்றனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து சுமார் 20 பவுன் நகைகளை கைப்பற்றியுள்ளனர். தற்போது இவர்களின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த போலீசார் அவர்களின் பாஸ்போர்ட்டை முடக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

Tags : #POLICE