'கஷ்டப்பட்டு' கதவை ஒடைச்சு... இப்டி பாத்திரத்தோட 'தூக்கிட்டு' போய்ட்டாங்களே... இதெல்லாம் நல்லாவா இருக்கு?
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருட வந்த இடத்தில் நகை, பணம் எதுவும் சிக்கவில்லை என்பதால் மீன் குழம்பை சட்டியோடு தூக்கி சென்றுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவரின் வீட்டுக்குள் நேற்றிரவு திருடர்கள் புகுந்துள்ளனர். தொழிலாளி அவரது மனைவி இருவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளனர். இதையடுத்து கொள்ளையர்கள் வீட்டின் பல்வேறு இடங்களில் நகை, பணத்தை தேடிப்பார்த்து இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு எதுவும் சிக்கவில்லை.
தொடர்ந்து சமையல் கட்டுக்கு சென்ற திருடர்கள் அங்கு மீன் குழம்பு இருப்பதை பார்த்து சட்டியோடு அதையும், மற்றொரு பாத்திரத்தில் இருந்த சாப்பாடையம் தூக்கிச்சென்று பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து சாப்பிட்டு சென்றுள்ளனர். காலையில் எழுந்து பார்த்த தொழிலாளி சமையலறை கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது சாப்பாட்டு பாத்திரத்தை காணவில்லை. இதையடுத்து வீட்டின் உள்ளே சென்று நகை, பணம் எதுவும் திருடு போகவில்லை என்பதை உறுதி செய்து கொண்டனர். சாப்பாட்டு பாத்திரம் அருகில் இருந்த மொட்டை மாடியில் கிடந்துள்ளது. திருட வந்த இடத்தில் மீன் குழம்பை திருடர்கள் சாப்பிட்டு சென்ற விஷயம் தற்போது அப்பகுதி மக்களுக்கு நகைச்சுவையான விஷயங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

மற்ற செய்திகள்
