‘பையில் நிரப்பியும் மீதமிருந்த பணம்’.. ‘வெளியே சிதறி கிடந்த 500 ரூபாய் கட்டுக்கள்’.. அதிரவைத்த கொள்ளை சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாகர்கோவில் அருகே பழக்கடையில் இருந்த பணத்தை மர்ம நபர் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மேல சூரங்குடியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் நாகர்கோவிலில் மொத்த வியாபார பழக்கடை நடத்தி வருகிறார். வெளியூரில் இருந்து வரும் பழங்களை கொள்முதல் செய்து, அதை மாவட்டம் முழுவதும் சப்ளை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வேலை முடிந்து கடையை மூடிவிட்டு வீட்டுக்குக் சென்றுள்ளார்.
பின்னர் அடுத்த நாள் காலை கடையை திறக்க வரும்போது கடையின் ஷட்டர் உடைந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியைடைந்துள்ளார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது மேஜை டிராயரில் வைக்கப்பட்டிருந்த 23 லட்ச ரூபாய் கொள்ளை போனது தெரியவந்துள்ளது. அப்போது அந்த பகுதியில் சில 500 ரூபாய் கட்டுகள் கிடந்துள்ளன, அவற்றை கைப்பற்றியபோது சுமார் 5 லட்ச ரூபாய் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து கொள்ளை சம்பவம் தொடர்பாக வடசேரி காவல்நிலையத்தில் சிவக்குமார் புகார் கொடுத்துள்ளார். உடனே கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்தபோது, தலையில் பாலீத்தீன் கவரை அணிந்து முகத்தை மறைத்திருந்த மர்ம நபர், கம்பியால் மேசை உடைத்து பணத்தை அங்கிருந்த துணியை எடுத்து கட்டியது தெரியவந்தது.
பின்னர் அவர் அங்கிருந்த ஒரு பையை எடுத்து அதில் பணத்தை எடுத்துப் போட்டுள்ளார். பை நிறைந்த பின்னரும் பணம் மீதமிருந்துள்ளது. அந்த பணத்தை அங்கேயே விட்டுவிட்டு பையில் நிரப்பிய பணத்துடன் அங்கிருந்து தப்பியுள்ளார். சிசிடிவி காட்சியை அடிப்படையாக வைத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இவர் பெரிய கொள்ளை கும்பலை சேர்ந்தவர் இல்லை என்றும், பழக்கடையில் இவ்வளவு பணத்தை எதிர்பார்க்கவில்லை, அதனால்தான் பை ஏதும் எடுத்து வரவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும் மதுக்குடிப்பதற்காக திருடுபவர் போல தெரிவதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கேரள மாநிலம் நெடுமங்காடு பகுதியை சேர்ந்த கோபால் (67) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘மது குடிப்பதற்காக இதுவரை சிறிய தொகையை திருடி வந்தேன். பழக்கடையில் அதிக பணத்தைக் கொள்ளையடித்ததால் அதை என்ன செய்வதென்று தெரியவில்லை. அதில் எத்தனை ரூபாய் இருக்கிறது எனக் கூட எண்ணிப்பார்க்கவில்லை. போலீஸ் வரும் என எனக்கு தெரியும். அதனால் வெட்டூர்ணிமடம் டாஸ்மாக்கில் மது வாங்கி குடித்துக்கொண்டு கையில் பணப்பையுடன் இருந்தேன். போலீசார் அங்கு வந்து அழைத்ததும் அவர்களுடன் நான் வந்துவிட்டேன்’ என தெரிவித்துள்ளார். போலீசார் அவரிடமிருந்து 17 லட்ச ரூபாயை மீட்டுள்ளனர். கோபால் நாகர்கோவில் சந்தைப் பகுதியில் மூட்டை தூக்கும் வேலை செய்து வந்துள்ளார். இரவு நேரங்களில் அப்பகுதிகளில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து மது குடித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மற்ற செய்திகள்
