VIDEO: ‘சத்தம் கேட்டு நாங்க மட்டும் போயிருந்தா..!’.. ‘ஊரடங்கு’ சமயத்தில் நடந்த அதிர்ச்சி.. அதிரவைத்த சிசிடிவி காட்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கள்ளக்குறிச்சி அருகே கயிறு கட்டி கோயிலுக்கு இறங்கி உண்டியல் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ஆதிதிருவரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள உண்டியல் பணத்தை கடந்த 4ம் தேதி மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து தெரிவித்த கோயில் அர்ச்சகர், ‘இந்த சம்பவம் கடந்த 4ம் தேதி இரவு சுமார் 12.30 மணியளவில் நடந்துள்ளது. கோயில் காலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் யாரும் கோயிலுக்கு வருவதில்லை. அதனால் ஆராதனை முடிந்துவிட்டு கோயிலை மூடிவிட்டு வந்துவிடுவோம். நாங்கள் எப்பவும் 11 மணிக்கு கோயிலை சுற்றி பார்த்துவிட்டு ராஜகோபுரம் அருகே படுத்துக்கொள்வோம்.
ஆனால் திருடர்கள் இரவு 12.30 மணிக்கு மேல் வந்துள்ளனர். கோயிலுக்கு வெளியே உள்ள வேப்பமரத்தில் கயிறு கட்டி மதில் சுவரை தாண்டி வந்துள்ளனர். பின்னர் சத்தமில்லாமல் உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். இரவு காவலர் ஒருவர் எல்லாம் சரியாக இருக்கிறாதா என பார்த்து வருவார். அதேபோல் அன்று அவர் சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து எங்களிடம் கூறினார்.
பின்னர் இந்து சமய அறநிலைத்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தோம். சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்தபோது 3 பேர் ஆயுதங்களுடன் உள்ளே இறங்கி வந்தது தெரியவந்தது. சத்தம் கேட்டு யாரும் உள்ளே வந்துவிடுவார்கள் என்பதற்காக கதவு அருகே இரண்டு பேர் பயங்கர ஆயுதங்களுடன் நிற்க வைத்துவிட்டு ஒருவனே பூட்டை உடைத்துள்ளான். சத்தம் கேட்டு நாங்கள் யாரேனும் உள்ளே சென்றிருந்தால் உயிர்சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது’ என தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊரடங்கு சமயத்தில் கோயில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News Credits: Vikatan