‘10 வருஷத்துக்கு முன்னாடி வீட்டைவிட்டு துரத்திட்டாங்க’.. சென்னையை அதிரவைத்த ‘வாலிபர்’.. வெளியான திடுக்கிடும் தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்10 வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டு துரத்தப்பட்ட நபர் சென்னையின் பல்வேறு பகுதிகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எழும்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் நடைபயற்சி மேற்கொள்பவர்களிடம் கடந்த மாதம் தொடர்ச்சியாக இருசக்கரத்தில் வந்த நபர் ஒருவர் செல்போன் பறிப்பில் ஈடுப்பட்டுள்ளார். இதுகுறித்து புகார்கள் தொடர்ந்து வந்ததை அடுத்து போலீசார் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அனைத்து வழிப்பறி சம்பவத்திலும் ஈடுபட்டது ஒரே நபர் என தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து சிசிடிவி காட்சியில் பதிவான மர்ம நபரின் புகைப்படம் சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை கோட்டூர்புரம் பகுதியில் நடைபயற்சி மேற்கொண்ட நபர் ஒருவரின் செல்போன் பறிக்க முயன்ற நபரை போலீசார் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் இவர் மீது எழும்பூர் காவல் நிலையத்தில் செல்போன் பறிப்பு உள்ளிட்ட பல வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பிடிப்பட்ட அந்த நபரை எழும்பூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அங்கு அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் செயிண்ட் தாமஸ் மவுண்ட் பகுதியை சேர்ந்த வினோத் அலெக்சாண்டர் என்ற குதிரை சிவா என்பது தெரியவந்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டிலிருந்து திருட்டு வழக்கில் பலமுறை சிறை சென்று வந்தது தெரியவந்தது. வினோத் அலெக்சாண்டர் தொடர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததால் அவரது குடும்பத்தினர் 10 ஆண்டுகளுக்கு முன்பே அவரை வீட்டை விட்டி வெளியே துரத்தியுள்ளனர்.
இவர் மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் சுமார் 25-க்கும் மேற்பட்ட செல்போன் பறிப்பு மற்றும் நகை பறிப்பு உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கடந்த 9 மாதங்களாக சிறையில் இருந்துள்ளார். தற்போது கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிறையிலிருந்து நிபந்தனையின் பேரில் வெளியே வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் மெரினா கடற்கரை ப்ளாட்பார்மில் இரவு தூங்கிக் கொண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். செல்போன் திருட்டு மற்றும் நகை பறிப்பில் வரும் பணத்தை கொண்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கோவா ஆகிய பகுதிகளுக்கு அடிக்கடி சென்று ஹோட்டலில் அறை எடுத்து மது, பெண்கள் என உல்லாசமாக இருந்துள்ளார். இவரிடமிருந்து 6 விலை உயர்ந்த செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.