இந்திய அணியின் பிரபல ‘விக்கெட் கீப்பர்’ வீட்டில் புகுந்த கொள்ளையர்கள்.. ஊரடங்கில் நடந்த பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் விக்கெட் கீப்பர் விரித்திமான் சகாவின் பரம்பரை வீட்டில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விக்கெட் கீப்பராக சகா செயல்பட்டு வருகிறார். ஒருநாள், டி20 போட்டிகளுக்கு ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் போன்ற வீரர்கள் விக்கெட் கீப்பிங் செய்து வருகின்றனர். ஆனால் எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட் என்றால் விக்கெட் கீப்பிங்கிற்கு சகா தான் சாய்ஸ். தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின் சகாதான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். இப்போதைக்கு உலகளவில் சிறந்த விக்கெட் கீப்பர் சகாதான் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புகழ்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரியில் சகாவின் குடும்பத்துக்கு சொந்தமான பரம்பரை வீட்டில் நேற்று இரவு கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சகாவின் மாமா கூறும்போது,‘6 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடிக்க வீட்டுக்குள் புகுந்தது. நான் உடனடியாக சுதாரித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தேன். இதனையறிந்த கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்’ என தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக தெரிவித்த சகா,‘இந்த கொள்ளை சம்பவம் என்னை மிகவும் வருத்தமடைய செய்துள்ளது. சிறுவயதில்தான் இதுபோன்ற கொள்ளை சம்பவம் குறித்து கேள்விப்பட்டுள்ளேன். இதுதொடர்பாக காவல்துறை துரிதமாக நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார். தற்போது சகா குடும்பத்துடன் கொல்கத்தா நகரில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.