'அமெரிக்காவிலிருந்து வந்த காதலி'... காதலனை 'காதலி'யே கடத்தியது அம்பலம்... 'அதிர்ச்சியூட்டும் காரணம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 12, 2019 10:31 AM

அமெரிக்காவிலிருந்து காதலனை பார்க்க வந்த காதலியே, காதலனை ஆள் வைத்து கடத்தி அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

college student kidnapping case police enquiry in chennai

சென்னை கீழ்ப்பாக்கம் ராமநாதன் தெருவைச் சேர்ந்தவர், நவீத் அகமது. இவர் தனியார் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நவீத் அகமதுக்கும், அமெரிக்கா வாழ் இந்திய இளம்பெண் ஒருவரும், காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து காதலனை பார்க்க, இளம்பெண் சென்னை வந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது இருவருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டதாகத் தெரிகிறது. இருவரும் பிரிந்துவிடலாம் என்ற நிலையில், இரு வாரங்களுக்கு முன், படம் பார்க்க சென்றுள்ளனர். படம் பார்த்து விட்டு, தனது என்.ஆர்.ஐ. காதலியை சேத்துப்பட்டில் உள்ள அவரது குடியிருப்பில் இறக்கி விட்டு திரும்பிய நவீத் அகமதுவை, மூன்று பேர் கொண்ட கும்பல்  கடத்திச் சென்றதாகத் தெரிகிறது.

கடத்திச் சென்ற மாணவரை, கத்திபாரா பாலத்துக்கு கீழே அந்தக் கும்பல் அடித்து உதைத்துள்ளது. உடனடியாக இரண்டு லட்ச ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என அவர்கள் மிரட்டியதாக சொல்லப்படுகிறது. ஆனால் பணம் இல்லை என்று நவீத் அகமது கூறியதும், அவரது செல்போனை பறித்துக் கொண்டு அந்தக் கும்பல் தப்பி ஓடியுள்ளது.

இதுதொடர்பாக டி.பி. சத்திரம் காவல்நிலையத்தில் நவீத் அகமது புகார் அளித்தார். மர்மநபர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை போலீசிடம் நவீத் கூறவே, அதை வைத்து மூன்று பேரையும் போலீசார் கண்டுபிடித்தனர். வேளச்சேரியைச் சேர்ந்த பாஸ்கர், சரவணன் மற்றும் லெனின் ஆகியோர் தான் நவீத்தை கடத்தியது விசாரணையில் தெரியவந்தது.

லெனின் தப்பிய நிலையில் மற்ற இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், நவீத்தைக் கடத்தச் சொன்னதே, அவரது அமெரிக்க காதலி தான் என்ற தகவலை கேட்டு போலீசார் அதிர்ந்து போனார்கள். காதலன் நவீத், அடிக்கடி தகராறு செய்வதாகவும், தன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வைத்து மிரட்டுவதாகவும் அமெரிக்க பெண் கூறியிருக்கிறார். 

எனவே செல்போனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் கடத்திச் சென்றதாகவும் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அமெரிக்க பெண்ணிடமும் நடத்திய விசாரணையில் இது உறுதிபடுத்தப்பட்டது. இதில் தலைமறைவாக இருக்கும் லெனின் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.  காதலனின் செல்போனை பறிக்க, காதலியே அவரை ஆள் வைத்து கடத்திய சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #KIDNAP #ATTACK #CHENNAI