'சார் நான் இத படிக்கணும்னு சொன்னேன்'... 'ஆனா அவரு இதத்தான் படிக்கணும்னு சொல்ராரு'... 'தந்தைமீது போலீசிடம் புகாரளித்த மகள்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | May 15, 2019 04:37 PM
மாணவி ஒருவர் தனக்கு விருப்பமான கல்லூரி படிப்பை தேர்வு செய்வதில், தந்தை முட்டுக்கட்டை போடுவதாக கூறி போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ஈஸ்வரன் நகரை சேர்ந்த அந்த மாணவியின் தந்தை, பாடியில் உள்ள தனியார் கம்பெனியில் துணை மேலாளராக உள்ளார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் முதல் மகளான அந்த மாணவி, திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இருந்தார். மாணவியின் தந்தை மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் தனியாக வசித்து வருவதாகத் தெரிகிறது.
இந்நிலையில் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவி, இதழியல் அல்லது சட்டம் படிக்க முடிவு செய்தார். ஆனால் இதற்கு அவரது தந்தை எதிர்ப்பு தெரிவித்து தனக்கு விருப்பமான மேல்படிப்பை படிக்குமாறு கூறி வந்ததாகத் தெரிகிறது. இதனால் தந்தை-மகள் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சான்றிதழ் வாங்க மாணவி சென்றபோது, ஏற்கனவே அவரது சான்றிதழ்களை தந்தை வாங்கி சென்றிருப்பது தெரிந்தது.
மேலும் வீட்டில் இருந்த 10-ம் வகுப்பு சான்றிதழும் மாயமாகி இருந்தன. இதுபற்றி மாணவி தனது தந்தையிடம் கேட்டார். அப்போது அவரது தந்தை, தனக்கு விருப்பமான பி.எஸ்.சி. இயற்பியல் அல்லது வேதியியல் படிக்குமாறு அறிவுறுத்தினார். இல்லையேல் மேல் படிப்பு படிக்க வேண்டாம் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
இதனால் மனவேதனை அடைந்த மாணவி இதுபற்றி சைல்டு கேர் எண்ணுக்கு அழைத்து தனது தந்தை மீது புகார் அளிக்க மாணவி முயன்றுள்ளார். ஆனால், சைல்டு கேரில், போலீசில் புகார் அளிக்குமாறு மாணவியிடம் அறிவுறுத்தியுள்ளனர். வாட்ஸ்-அப் மூலம் போலீசில் மாணவி புகார் செய்தார். அதில் மேல்படிப்பு படிக்க தனது பள்ளி சான்றிதழை தந்தை தர மறுப்பதாக புகார் தெரிவித்து இருந்தார். இந்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க செவ்வாப்பேட்டை போலீசுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
போலீசார் மாணவியையும், அவரது தந்தையையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவியின் விருப்பத்துக்கு ஏற்ப படிக்க வைக்குமாறு, காவல்துறையினர் அறிவுரை கூறினர். மாணவியின் சான்றிதழ்களை தருவதாக தந்தை ஒப்புக்கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.