'அப்போ மழை வேணாம்.. இதான் வேணும்... அப்டிதானே'.. வெதர்மேனின் வைரல் போஸ்ட்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | May 07, 2019 06:50 PM
மழையை விட மேட்ச் தான் முக்கியம் என்று கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்துள்ள கருத்துகள், ஆச்சரியத்தை அளிப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் உள்மாவட்டங்களில் வெப்பச் சலனத்தால் அடுத்த இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். மேற்கு திசையில் இருந்து வரும் சூடான வறட்சியான காற்றும், கிழக்குப் பகுதியில் இருந்து ஈரப்பதம் உள்ள காற்றும் சந்திக்கும் இடங்களில் வெப்பச் சலன காரணமாக மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
அதிர்ஷ்டம் இருந்தால் சென்னையில் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்யலாம் குறிப்பாக மேற்கு சென்னையில் மழை பெய்யலாம் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ப்ளே ஆஃப் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில், சென்னையில் மேக மூட்டத்துடன் வானம் காணப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் சில இடங்களில் தூரல் போடுகிறது. இதனால், கிரிக்கெட் போட்டி நடைபெற வேண்டும் என்பதற்காக, ரசிகர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் மழை வேண்டாம் என்பதுபோல் கருத்து கூறியிருப்பது, வருத்தத்தை அளிப்பதாக தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.
