'புரிஞ்சா பிஸ்தா'.. சாலை விதிக்கும் அஸ்வினின் மன்கட் அவுட்டுக்குமான கனெக்ஷன்? வைரல் போட்டோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | May 10, 2019 11:11 AM
ஜெய்ப்பூரில் இந்த ஐபிஎல் 12-வது சீசனில் ரஹானே கேப்டன்ஷிப்பில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், அஸ்வினின் கேப்டன்ஷிப்பில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்குமான ஐபிஎல் போட்டியில் அஸ்வின் செய்த மன்கட் அவுட் வைரலானது.
அந்த மேட்சின் 13வது ஓவரின் 5வது பந்தை அஸ்வின் வீசியபோது, பட்லர் கிரீஸை விட்டு ஒரு அடி நகர்ந்ததும், அஸ்வின் மன்கட் ரன் அவுட்டை செய்தார். பவுலர் பந்து வீசும் முன், ரன்னர் லைனை விட்டு நகர்ந்தால், இப்படி அவுட் செய்யலாம் என்கிற இந்த விதியையே தான் கடைபிடித்ததாக அஸ்வின் கூற, இன்னொரு புறம் கிரிக்கெட்டியேலே அஸ்வின் சிறுபிள்ளைத் தனமாக நடந்துகொண்டதாக விமர்சனங்கள் எழுந்ததோடு, அஸ்வினின் இந்த செயல் சர்ச்சைக்குள்ளாகியது.
இந்நிலையில் சென்னை டிராஃபிக் போலீஸ் இந்த சர்ச்சைக்குரிய சம்பவத்தின் புகைப்படத்தை வைத்து பொதுமக்களுக்கு கூறியுள்ள மெசேஜ் வைரலாகி வருகிறது. எப்போதுமே நடப்பு சம்பவங்களோடு தொடர்பு படுத்தி சாலை விதிகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் தமிழ்நாடு டிராஃபிக் போலீஸ் துறை இந்த மன்கட் அவுட் சம்பவத்தையும் வைத்து, ‘லைனை தாண்டிங்கனா அவுட்தான் ஆகவேண்டும்’ என்கிற அர்த்தம் வருமாறு, அஸ்வின் ஜாஸ் பட்லரை மன்கட் அவுட் செய்யும் புகைப்படத்தை பேனரில் வைத்து, அதன் கீழ் சாலையில் உள்ள லைனை தாண்டி வாகனம் ஓட்ட வேண்டாம் என்கிற விதியை வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கென அச்சடிக்கப்பட்ட சிறிய பேனர்களை நகரம் முழுவதும் டிராஃபிக் காவல்துறை பார்வைக்கு வைத்துள்ளது. இந்த பதாகைகள் அஸ்வின் மன்கட் அவுட் செய்த அடுத்த சில தினங்களிலேயே வைக்கப்பட்டிருந்தாலும், இந்த புகைப்படங்கள் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளன. இருப்பினும் இந்த பதாகைகள் டிராஃபிக் போலீஸின் ஐடியாவா அல்லது சாலை விதிகளை வலியுறுத்துவதில் போலீஸாருடன் கைகோர்க்கும் தனியார் விளம்பரதார நிறுவனங்களின் ஐடியாவா என்பது ஊர்ஜிதமாகவில்லை.