'சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர்'... தனது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நேர்ந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 13, 2019 11:02 AM

சென்னை அயனாவரத்தில் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர், வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

auto driver murdered in chennai due to stopped the girl child marriage

சென்னை அயனாவரம் திக்காகுளத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ஜெபசீலன். இவருக்கு பிரிசில்லா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகள் ஷீபா ராணிக்கு கடந்த 10-ம் தேதி திருப்பதியில் திருமணம் நடந்து முடிந்து, மீஞ்சூரில் நேற்று வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது வரவேற்பு நிகழ்ச்சிக்காக ஆட்டோ ஓட்டுநரான ஜெபசீலன் மற்றும் அவரது மனைவியும் சென்றுகொண்டிருந்தனர்.  திக்காகுளம் அருகே இவர்களை வழிமறித்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், ஜெபசீலனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஜெபசீலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை தடுக்க வந்த மனைவி பிரிசில்லாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுதொடர்பாக அயனாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், கடந்த ஏப்ரல் மாதம் 17-ம் தேதி, ஆட்டோ ஓட்டுநரின் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், வினோத் என்பவருக்கும் நடக்க இருந்த திருமணத்தை ஜெபசீலன் தான் தடுத்து நிறுத்தியதாகத் தெரிகிறது. அதனால் ஏற்பட்ட முன் விரோதத்தில் அவரை கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது. தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags : #MURDER #CHENNAI #AUTODRIVER