'தாயை கொலை செய்து, தம்பியை தாக்கிவிட்டு'... அந்தமானுக்கு ஆண் நண்பருடன்... 'சுற்றுலா சென்ற பெண் சாஃப்ட்வேர் இன்ஜினியர்’... அதிரவைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Feb 06, 2020 07:20 PM

பெற்ற தாயை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, தம்பியை தாக்கிவிட்டு, ஆண் நண்பருடன் சுற்றுலாவுக்காக அந்தமானுக்கு தப்பியோடிய பெண் என்ஜினியர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bengaluru Techie Who Killed Her Mum, Flies With Boyfriend

பெங்களூர் கே.ஆர். புரம் அருகே வசித்து வருபவர் மென் பொறியாளர் அம்ருதா சந்திரசேகர் (33). ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவர், தந்தை இறந்துவிட தாய் நிர்மலா (52) மற்றும் ஐ.டி. ஊழியரான தம்பி ஹரிஷ் (30) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். ஹைதராபாத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், அங்கு செல்லப் போவதாக அம்ருதா வீட்டில் தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வெறித்தனமாக பேசுவது போன்று ஏதோ சத்தம் அம்ருதாவின் அறையில் கேட்டுள்ளது.

இதையடுத்து கண்விழித்துப் பார்த்த தம்பி ஹரீஷ், தனது அக்கா அறைக்கு சென்று, அங்கு அலமாரியில் இருந்து துணிகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்த அம்ருதாவிடம், என்னவென்று கேட்டதுடன், ஏதாவது உதவி செய்யட்டுமா என்று கேட்டுள்ளார். ஆனால் உதவி எதும் வேண்டாம் என்று அம்ருதா கூறவே, பின்னர் தனது அறைக்குப் போய் தம்பி ஹரீஷ் படுத்துக்கொண்டார். சிறிது நேரம் கழித்து தம்பியின் அறைக்கு வந்த அம்ருதா, அவரை கழுத்தில் முதலில் கத்தியால் குத்தி, கம்பியால் தாக்கியுள்ளார். இதில் மயங்கி விழுந்த தம்பி இறந்துவிட்டதாக நினைத்த அம்ருதா, பின்னர் தாயாரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்.

பின்னர் படுகாயங்களுடன் கண்விழித்து பார்த்த தம்பி ஹரீஷ், உறவினர்கள் உதவியுடன் போலீசாரை அணுகியுள்ளார். இதையடுத்து சிசிடிவி காட்சிகள் உதவியுடன் அவர்கள் நடத்திய விசாரணையில், வீட்டிலிருந்து வெளியே சென்ற அம்ருதா, சிறிது தூரத்தில் பைக்கில் காத்திருந்த ஆண் நண்பர் ஸ்ரீதர் ராவுடன், கெம்பேகௌவுடா விமானநிலையத்தில் இருத்து, காலை 6.30 மணிக்கு அந்தமானின் போர்ட்பிளேருக்கு விமானத்தில் 5 நாள் விடுமுறைக்கு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அந்தமானுக்கு சென்ற பெங்களூர் போலீசார், அங்கு ஹோட்டலில் தங்கியிருந்த அம்ருதாவையும், ஆண் நண்பரையும் நேற்று கைதுசெய்து அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அவர்கள் இருவரும் பெங்களூர் அழைத்து அழைவரப்பட்ட பின்னரே முழு விபரங்கள் தெரியவரும் என மகாதேவபுரம் துணை ஆணையர் அனுசேத் கூறியுள்ளார். ஏனெனில், முதல் கட்ட விசாரணையில் அம்ருதா பகிர்ந்த தகவல்களும், அவரது தம்பி கூறும் காரணங்களும் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் பல குழப்பங்கள் இருப்பதுடன், அவர்கள் கூறும் காரணங்கள் ஜீரணிக்க கூடியதாக இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். முதல் கட்ட விசாரணையில், அம்ருதாவின் தந்தை கடந்த 2013-ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட, அவர் சிகிச்சைக்காக 4 லட்சம் ரூபாய் கடன் குடும்பத்தினர் வாங்கியுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட, உரிய நேரத்தில் அந்த குடும்பம் கடனை கட்ட முடியாமல் 15 லட்சம் ரூபாயாக கடன் உயர்ந்து கஷ்டப்பட்டுள்ளனர். இந்த கடனில் இருந்து மீளமுடியாததுடன், கடன் கேட்டவர்கள் வீட்டுக்கு வந்து சத்தம் போட்டுவர, அம்ருதா மனதளவில் உடைந்து போயுள்ளார்.

இதனால் தனது தாயையும், தம்பியையும் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார். அதற்கு முன்பு தனது ஆண் நண்பருடன் சுற்றுலா சென்று வந்துவிடலாம் என்று எண்ணிய அவர், அதைப் போலவே தாயையும், தம்பியையும் கொலை செய்துவிட்டதாக எண்ணி அந்தமானுக்கு பறந்து சென்றுள்ளார். ஆனால் அம்ருதாவின் இந்த திட்டம் அவரது ஆண் நண்பருக்கு தெரியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இதற்கிடையில், அம்ருதாவும், அவரது ஆண் நண்பர் ஸ்ரீதர் ராவும் பழகி வருவது பிடிக்காமல் தாயும், தம்பியும் அம்ருதாவிடம் வாக்குவாதம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்தமானில் சுற்றுலா செல்வதற்காக, ஜனவரி 31-ம் தேதியே அம்ருதா டிக்கெட் புக் செய்ததும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் முழு விசாரணைக்குப் பின்னரே உண்மை தெரியவரும் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.