'அம்மாவோட மரணத்தை அப்பாவால தாங்கிக்க முடியல...' 'மனநலம் பாதிச்சு வீட்டை விட்டு போய்ட்டார் ...' '23 வருஷம் ஆச்சு...' கொரோனாவால் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்23 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி இறந்ததால், பித்தாகி வீட்டை விட்டு ஓடிய தந்தையை கொரோனா காலத்தில் சமூகவலைத்தளத்தில் கண்டுபிடித்த சம்பவம் அனைவரையும் மனம் நெகிழ செய்துள்ளது.
தமிழகத்தில் பரவி வரும் தற்போதைய கொரோனா வைரஸ் காலத்தில் ஒரு சில மனம் நெகிழும் சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றனர். அதில் ஒன்று தான் தூத்துக்குடியில் சாலை ஓரம் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த வேல்முருகன் தனது குடும்பத்தாரோடு இணைந்துள்ளார்.
23 வருடங்களுக்கு முன்பு தன் மனைவி இறந்த சோகத்தை தாங்கிக்கொள்ள முடியாத வேல்முருகனுக்கு மனநலம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. ஒருநாள் தீடீரென வீட்டை விட்டு ஓடியுள்ளார். வீட்டை விட்டு சென்ற தந்தையை பல இடங்களில் தேடி அலைந்துள்ளார் அவரது மகன். காலங்கள் ஓடியது ஆனால் வேல்முருகன் கிடைத்தபாடில்லை.
இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பல தன்னார்வல நிறுவனங்களும், தனி மனிதர்களும் உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகின்றனர். அதேபோல் தூத்துக்குடியில் மனிதம் விதைப்போம், சோயா அறக்கட்டளை மற்றும் ஹெல்பிங் ஹேண்ட்ஸ் உள்ளிட்ட அறக்கட்டளைகள் இணைந்து தூத்துக்குடி பகுதியில் சாலை ஓரங்களில் இருப்பவர்களுக்கு அடைக்கலம் அளித்து, உணவு உள்ளிட்டவற்றை கொடுத்து பராமரித்து வருகின்றனர்.
மேலும் சாலைகளில் இருக்கும் வயதானவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் அவர்களை தங்க வைத்து முடிவெட்டி, புது ஆடைகளை வழங்கி பராமரித்து வருகின்றனர். இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் ஒருவர் தான் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன வேல்முருகன். அழுக்கு உடையுடனும், சிக்குப் பிடித்த தலையுடனும் சுற்றித்திரிந்த வேல்முருகன் என்பவரை மீட்ட அறக்கட்டளையினர் அவருக்கு முடிவெட்டி புத்தாடை அணிவித்து அழகு பார்த்தனர்.
இவரின் அழகிய புகைப்படம் ஒன்று சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலானது. இந்த வைரல் புகைப்படம் தந்தையை இழந்த ராமசந்திரன் கண்ணிலும் பட்டுள்ளது. இதையடுத்து 23 ஆண்டுகளுக்கு பிறகு தன் தந்தையை பார்த்த சந்தோஷத்தில் உடனடியாக புகைப்படத்தை பதிவு செய்தவர்களை தொடர்பு கொண்டு தன் தந்தையை நேரில் சென்று கண்டுள்ளார் ராமசந்திரன்.
இது குறித்து ராமசந்திரன் கூறும் போது “23 வருடங்களுக்கு முன்பு எதிர்பாராத விதமாக எனது அம்மா இறந்து விட்டதால், அதை தாங்கிக் கொள்ள முடியாமல் மனநலம் பாதித்த என் தந்தை, திடீரென்று ஒரு நாள் அவர் காணாமால் போய் விட்டார். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சமூகவலைதளங்களில் எனது தந்தையின் புகைப்படம் பரவியதை நண்பரின் மூலம் தெரிந்துகொண்டேன். எனது தந்தை மீண்டும் கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்னுடைய பொருளாதார வசதியில் என் அப்பாவிற்கு தேவையான சிகிச்சைகளை என்னால் செய்ய முடியாது. ஆனால் பல தன்னார்வல தொண்டு நிறுவனம் என் அப்பாவிற்கு உதவ முன்வந்துள்ளனர். அவர் முறையான சிகிச்சை பெற்று பூரண குணமடைந்த பின் எனது தந்தையை நான் அழைத்துச் செல்வேன்' என்று கூறியுள்ளார்.
மேலும் என் தந்தையை 23 வருடங்களுக்கு பிறகு கண்ணில் பட வைத்த மனிதம் விதைப்போம், சோயா அறக்கட்டளை மற்றும் ஹெல்பிங் ஹேண்ட்ஸ் உள்ளிட்ட அறக்கட்டளைகளுக்கு எனது மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்து கொள்வதாகவும் உள்ளம் உருக கூறினார் ராமசந்திரன்.