'சென்னையில் கொரோனா பரவல்’... ‘அதிகரிக்க காரணம் இதுதான்’... ‘சென்னை மாநகராட்சி விளக்கம்’... ‘இந்த 6 ஏரியாக்களில் தான் ஜாஸ்தி’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 29, 2020 09:11 PM

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து, அதிகரிப்பதற்கான காரணம் குறித்து சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

Why six zones are endangered in chennai, reason explained

சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், ‘சென்னையில் கொரோனா பரவல் வேகம் பெரிய அளவில் சவால் அளிக்கிறது. சென்னையில் கொரோனா தொற்று உறுதியாகும் 90 சதவிகிதம் பேருக்கு எவ்வித அறிகுறிகளும் இல்லாமலேயே வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். கிராமப்புறங்களை விட சென்னையில் அதிகமான மக்கள்தொகை உள்ளது. ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 26 ஆயிரம் முதல் 55 ஆயிரம் பேர் வரை வசிக்கின்றனர்.

இந்த நெருக்கடியான வாழ்க்கைமுறைதான், அதிக எண்ணிக்கையில் சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட காரணமாக உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் ஆகிய 6 மண்டலங்களில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 65% பேர் இந்த 6 மண்டலங்களில் தான் உள்ளனர்.

இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதைக் குறைக்க கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடைகளில் சரியான முறையில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும் தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரிசோதனையை 2,000 ஆக உயர்த்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.