என் பொண்ணுக்கு ‘கொரோனா’ இல்ல... அவ ‘ஆபத்துல’ இருக்கா... ‘மீட்க’ கோரி ‘தந்தை’ எழுதிய ‘உருக்கமான’ கடிதம்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Feb 22, 2020 05:27 PM

கொரோனா பாதிப்புள்ள ஜப்பான் கப்பலில் உள்ள தன் மகளை மீட்டுத் தருமாறு பிரதமர் மோடிக்கு தந்தை ஒருவர் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

Corona Ship Diamond Princess Sonalis Father Writes To PM Modi

சீனாவின் வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 2000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 15000க்கும் அதிகமானவர்கள் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஜப்பானை நோக்கி பயணம் செய்த கப்பலில் உள்ள பயணிகள் பலரும் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர் என்ற செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த சில நாள்களுக்கு முன்பாக ஹாங்காங்கிலிருந்து ஜப்பானுக்கு கிளம்பிய டைமண்ட் பிரின்சஸ் என்ற அந்த சொகுசுக் கப்பலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட சுமார் 3700 பேர் பயணித்துள்ளனர். இதையடுத்து பிப்ரவரி 5ஆம் தேதி ஜப்பானின் யோகோகாமா துறைமுகத்தை அடைந்தபோது அதில் பயணித்த முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, கப்பல் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டது.

இதைத்தொடந்து கொரோனா எளிதில் பரவும் தன்மை கொண்ட வைரஸ் என்பதால் கப்பலிலுள்ள 3000 பேரில் சுமார் 600 பேருக்கு வைரஸ் தொற்றுக்கான அறிகுறி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்தக் கப்பலில் உள்ள 3700 பேரில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 138 பேர் உள்ளனர். அவர்களில் 10 பேருக்கு வைரஸ் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நோய்த்தொற்று உள்ளவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கப்பலில் சிக்கியுள்ள தன் மகளை மீட்டுத்தரக் கோரி இந்தியாவைச் சேர்ந்த தினேஷ் தாக்கர் என்பவர் பிரதமர் மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

அதில் அவர், “என் மகள் சோனாலி தாக்கர் யோகோகாமா துறைமுகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பலில் இருக்கிறார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 15 நாள்களாக சிறிய அறையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கொரோனா வைரஸால் பாதிப்படைந்த நபர்களுடன் என் மகளும் இருப்பதால் அவருடைய வாழ்க்கையும் ஆபத்தில் உள்ளது. என்னுடைய மகளை இந்தியாவிற்கு அழைத்துவர அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

கடந்த டிசம்பர் முதல் டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் பணியாற்றிவரும் சோனாலி தாக்கரும் சில நாட்களுக்கு முன்பு கப்பலில் இருந்து தன்னை மீட்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, சில வீடியோக்களை வெளியிட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது கப்பலில் பாதிப்பிற்கு உள்ளான இந்தியப் பயணிகளின் உடல்நிலை முன்னேறி வருவதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ள நிலையில் அமெரிக்கா போன்ற நாடுகள் கப்பலிலிருந்து தங்கள் நாட்டு மக்களை மீட்டுவருகிறது.

Tags : #NARENDRAMODI #CHINA #CORONA #JAPAN #SHIP #DIAMONDPRINCESS #GIRL #FATHER