‘ரேசன் கடையில் 33 ரூபாய்க்கு வெங்காயம்’... 'தமிழக அரசு அதிரடி'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Sep 25, 2019 03:07 PM
வெங்காய விலை உயர்ந்ததை அடுத்து, குறைந்த விலையில் வெங்காயம் விற்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில், கனமழை காரணமாக விளைச்சல் குறைந்ததால், வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக வெங்காயம் விலை இரு மடங்காக உயர்ந்து கிலோ 60 முதல் 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சமையலில் முக்கிய பங்கு வகிக்கும், வெங்காயத்தின் விலை ஏற்றத்தால், பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, உணவங்களில், உணவுப் பொருட்களின் விலை உயரும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வெங்காய விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதாக கூறியது. அதன்படி, சென்னை தேனாம்பேட்டையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, ‘வெங்காய விலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. செயற்கையான விலையேற்றம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்தும் பெரிய வெங்காயம் வாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த பெரிய வெங்காயம் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும். இன்றிலிருந்து ரேசன் கடைகளிலும் பெரிய வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆந்திராவில் இருந்து கிலோ ரூ.30-க்கு பெரிய வெங்காயம் வாங்கப்பட்டு, கூட்டுறவு விற்பனை அங்காடிகள் (ரேசன்) மூலம் கிலோ ரூ.33-க்கு விற்கப்படும்’ என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். முதற்கட்டமாக சென்னையில் 200 ரேசன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.