‘எங்கள தொட்டால்தான் ஆளாக முடியும்னு நினைச்சு’... ‘இப்படி எல்லாம் படத்துக்கு விளம்பரம் தேடுறாங்க!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Sep 23, 2019 11:02 AM
நடிகர் விஜய் பிகில் ஆடியோ விழாவில் பேசியது குறித்து, பல்வேறு தரப்பிலிருந்தும், கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன.
அதிலும் பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் குறித்து, நடிகர் விஜயின் பேச்சுக்கு தொடர்ந்து விமர்சனங்கள் வருகின்றன. இந்நிலையில், கோவாவில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பிய அமைச்சர் ஜெயகுமார் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலை மக்கள் நீதி மய்யமும், அமமுகவும் புறக்கணித்துள்ளது குறித்த கேள்விக்கு தினகரன், கமல் போன்றவர்கள் ஒரு சீசனல் பொலிட்டீஷியன்ஸ்’ என்று தெரிவித்தார்.
யாரை எங்கே வைக்க வேண்டுமோ, அங்கே அவர்களை உட்கார வைத்தால் எல்லாம் சரியா இருக்கும் என விஜய் பேசி உள்ளது குறித்த கேள்விக்கு, பதிலளித்த ஜெயக்குமார், ‘விஜயோ கவுண்டமணியோ, செந்திலோ யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் அவர்கள் வந்தால் மக்களுக்கு என்ன செய்ய போகிறார்கள் என்பதைதான் சொல்ல வேண்டும். அதிமுக ஒரு பழுத்த மரம் பழுத்த மரம்தான் கல்லடி படும்’ என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
படத்திற்கு விளம்பரம் தேடவே ஆளும் தரப்பை விஜய் சீண்டுகிறாரா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், ‘நான் இதனை மறைமுகமாக கூறுகிறேன். ஆனால் நீங்கள் நேரடியாகவே கேட்டுவிட்டீர்கள்’ என தெரிவித்தார். ‘ஆளும் தரப்பை தொட்டால்தான் ஆளாக முடியும் என தொடுகிறார்கள். ஆனால் அதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள் என்பது வரலாறு. படம் ஓட வேண்டும் என்பதற்காக எங்கள் மீது இதுபோன்ற விமர்சனங்கள் வைக்கப்படுகிறது’ என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.