இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Sep 20, 2019 11:32 AM
1. பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியுள்ள நடிகர் விஜய், “சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் யார்மீது பழி போட வேண்டுமோ அதைச் செய்யாமல், ஓட்டுநர் மீதும், பேனர் அச்சடித்தவர் மீதும் பழிபோடுகிறார்கள்” எனக் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன், “பேனர் விஷயத்தில் நடிகர் விஜய் சரியான நேரத்தில் சரியான மேடையைப் பயன்படுத்தியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்

2. சென்னையில் ஐடி நிறுவன பெண் ஊழியர் ஜெனிட்டா ஜூலியஸ் என்பவர் வேலைக்குச் சேர்ந்த முதல்நாளே அலுவலகத்தின் மாடியில் இருந்து கீழே விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3. சென்னையில் கிரிக்கெட் விளையாடும்போது சக வீரர் வீசிய பந்து நெஞ்சில் பட்டு இளம் கடற்படை வீரர் உயிரிழந்துள்ளார்.
4. கீழடியில் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க கால நாகரிகம் இருந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
5. நெல்லை மாவட்டத்தில் இஸ்ரோவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20 பேரிடம் லட்சக்கணக்கில் பணமோசடி செய்த அரசுப்பேருந்து ஓட்டுநர் பெருமாள் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
6. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் முனைவோருக்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளார். அதன்படி அக்டோபருக்கு பிறகு தயாரிப்புத்துறையில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு 15 சதவிகிதம் மட்டுமே வரி விதிக்கப்படும் எனவும், நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த கார்ப்ரேட் வரி எனப்படும் வருமான வரி 22 சதவிகிதமாக குறைக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
7. கொல்கத்தாவில் ஜாதவ்புர் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்த வந்த பாஜக மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவை மாணவர்கள் முற்றுகையிட்டு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8. தவறான தகவல்கள் பரவுவதற்கு பொறுப்பேற்க முடியாது என்று பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தள நிறுவனங்கள் கூறுவதை ஏற்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. சைபர் குற்றங்களை தடுக்க சமூகவலைதள கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் இக்கருத்தினை பதிவு செய்துள்ளது.
9. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் சாலையில் நடந்து சென்றவர்கள்மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
10. சென்னையில் வெங்காயத்தின் விலை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு குவிண்டாலுக்கு 4500 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் கிலோ 35 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது ஒரு கிலோ வெங்காயம் 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
11. நிர்மலா சீதாராமனின் வரிக்குறைப்பு அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “கார்பரேட் நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இதன்மூலம் வேலை வாய்ப்புகள் உருவாகும். இது 130 கோடி மக்களுக்கான வெற்றியாக அமையும்” எனக் கூறியுள்ளார்.
12. தமிழகம், புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழையின் தீவிரம் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
13. சென்னை மாட்டாங்குப்பத்தைச் சேர்ந்த ஹரி எனும் அறிவழகனை 2 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்து, மூளையை தட்டில் வைத்துவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
14. நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டரின் 14 நாட்கள் ஆயுட்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் அதனுடன் தொடர்புகொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் இறுதிகட்ட முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
15. தோனியின் ஓய்வு குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், ‘தோனி அணியிலிருந்து வெளியே தள்ளப்படாமல், அவரே வெளியேற வேண்டும் என நான் நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
