‘ப்ளஸ் 1, 2 மாணவர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்’... ‘பொறியியலா? மருத்துவமா?’... ‘பாடத்திட்டமுறையில் அதிரடி மாற்றம்’

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 19, 2019 06:59 PM

தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள், இனி 500 மதிப்பெண்களுக்கும் தேர்வு எழுதலாம் என பாடத் திட்ட முறையை மாற்றி பள்ளிக் கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.

public exam will conduct for 500 marks tamilnadu gov

தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, 11, 12- ஆம் வகுப்புகளுக்கு 6 பாடங்களுக்குப் பதிலாக, 5 பாடங்களுக்கு மட்டுமே இனி தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் 600 மதிப்பெண்கள் முறையும் அமலில் இருக்கும். அதை விரும்பும் மாணவர்கள் அதனடிப்படையில் தேர்வு எழுதலாம்.

அதாவது, மருத்துவம் மற்றும் பொறியியல் இரண்டும் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்கள், தமிழ், ஆங்கிலம் அல்லது வேறு மொழி, இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட 6 பாடங்களை தேர்ந்தெடுத்து இரண்டு துறைகளுக்கும் செல்ல முடியும். பொறியியல் மட்டும் படிக்க விரும்பும் மாணவர்கள், தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப்பாடங்களை  உள்ளடக்கிய 5 பாடங்களை மட்டும் தேர்வு செய்து படிக்கலாம். பொறியியல் படிக்க விரும்புவோர் உயிரியல் பாடம் படிக்க தேவை இல்லை.

இதேபோல் மருத்துவ படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்கள், தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை சேர்த்து 5 பாடங்களை தேர்வு செய்து படிக்கலாம். இந்த மாணவர்கள் கணிதம் படிக்க தேவை இல்லை. வணிகவியல் பிரிவை சேர்ந்த மாணவர்கள், தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், கணக்குப் பதிவியல் என 5 பாடங்களை தேர்வு செய்யலாம். 

மாணவர்கள் தங்கள் விருப்பம் போல், 5 அல்லது 6 பாடங்கள் உள்ள வகுப்புகளில் சேரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வித் திட்டம், 2020-2021 கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் அழுத்தம் குறையும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : #EDUCATION #TAMILNADU