'தப்பான தகவலை சொல்லாதீங்க'...'வாட்ஸ் அப்பில் பரவும் வதந்தி'... பேனர் வைத்த கவுன்சிலர் மீது வழக்கு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Sep 13, 2019 10:06 AM
விபத்து நடந்தபோது சுபஸ்ரீ ஹெல்மேட் அணியவில்லை என்ற தவறான தகவல் பரவி வந்த நிலையில், அவர் ஹெல்மேட் அணிந்தே இருசக்கர வாகனத்தை ஓட்டியுள்ளார். இதனிடையே சுபஸ்ரீயின் உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இளம் பெண் சுபஸ்ரீயின் மரணம் சென்னை மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. 22 வயது பொறியியல் பட்டதாரியான சுபஸ்ரீ வீட்டிற்கு ஒரே மகள். இவர் கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தனது பணி முடிந்து பள்ளிக்கரணை வழியாக வீட்டிற்கு செல்லும் போது இந்த துயர சம்பவத்தில் சிக்கி அநியாயமாக தனது உயிரை இழந்துள்ளார்.
சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் அந்த வழியாக தனது இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியது. கண் இமைக்கும் நேரத்தில் இந்த அனைத்து துயரமும் நடந்து முடிந்து விட்டது. பேனர் கலாச்சாரத்தால் அநியாயமாக ஒரு உயிர் போனது பலருக்கு அதிர்ச்சியையும், கோபத்தையும் வரவைத்துள்ளது.
அரசியல் கட்சியின் பேனர்கள், திருமணத்திற்காக வைக்கப்படும் பேனர்கள்,மற்றும் சினிமா நட்சத்திரங்களுக்காக வைக்கப்படும் பேனர்கள் என விதிமுறைகளை மீறி வைக்கப்படும் பேனர்கள் மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் அந்த பேனர்களை அச்சடித்த அச்சகத்திற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளார்கள். இதனிடையே விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ ஹெல்மேட் அணியவில்லை என்று வாட்ஸ் அப்பில் வதந்தி பரவிய நிலையில், அவர் சிவப்பு நிற ஹெல்மேட் அணிந்தே இருசக்கர வாகனத்தில் சென்றது குறிப்பிடத்தக்கது.
#சுபஸ்ரீ தலைக்கவசம் அணிந்திருந்தார். தவறான தகவலை பரப்ப வேண்டாம். #Verified #Subasri #AdmkkilledSubasri #Banner #justiceforsubasri #Subhasri pic.twitter.com/gtTwFwb6Yh
— Mahalingam Ponnusamy (@mahajournalist) September 12, 2019