‘அடுத்த பாஜக தலைவர் ரஜினியா?’... ‘நண்பர் திருநாவுக்கரசர் பேட்டி’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Sep 04, 2019 06:44 PM
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதியில் அறிவித்தார். இதையடுத்து வந்த தமிழக இடைத்தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலிலும் நடிகர் ரஜினிகாந்த் சார்பில் யாரும் போட்டியிடவில்லை. அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தல் தான் தங்கள் இலக்கு என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்திரராஜனுக்கு, தெலுங்கானா ஆளுநர் பதவி கொடுக்கப்பட்டது. இதனால் அவர், தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதற்கிடையில் பாஜகவின் மாநிலத் தலைவராக, நடிகர் ரஜினிகாந்த் வரப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் நடிகர் ரஜினிகாந்தோ, பாஜக மூத்த நிர்வாகிகளோ இதுபற்றி எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.
இதனிடையே, இது குறித்து திருச்சி எம்.பி.யும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான, தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரிடம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில் ‘பாஜகவில் உறுப்பினராக இல்லாத ஒருவரால், எப்படி அக்கட்சியின் மாநில தலைவராகிவிட முடியும். ரஜினிகாந்த் பாஜகவில் உறுப்பினரே இல்லை. பின்னர் எப்படி தலைவராக முடியும். பாஜகவின் மாநில தலைவர் பதவி என்றில்லை, அக்கட்சியின் தேசியத் தலைவர் பதவியை கொடுத்தாலும் கூட அவர் ஏற்க மாட்டார். எனவே இதெல்லாம் வேடிக்கையானவை’ என்றார் திருநாவுக்கரசர்.
