‘த்ரில்லுக்காக’ தொழிலதிபர் செய்த அதிர்ச்சிக் காரியம்.. ‘கையும்களவுமாக’ மடக்கிப் பிடித்த போலீஸ்..
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | Aug 28, 2019 01:00 PM
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் விமான நிலையத்தில் திருடி கையும்களவுமாக பிடிபட்டுள்ளார்.

சாவ்லா ஹோட்டல்ஸ் தலைமை செயலதிகாரி தினேஷ் சாவ்லா தனது தந்தை காலத்தில் இருந்து அமெரிக்க அதிபர் டிரம்பின் குடும்பத்தினருடன் சேர்ந்து ஹோட்டல் தொழில் செய்து வந்தவர். தற்போது தனது சகோதரர் சுரேஷ் சாவ்லாவுடன் சேர்ந்து சில மோட்டல்களை நடத்தி வரும் இவர் க்ளெவ்லேண்டில் ஒரு பிரம்மாண்ட நட்சத்திர ஹோட்டலையும் கட்டி வருகிறார்.
இந்நிலையில் அமெரிக்காவின் மெம்பிஸ் விமான நிலையத்தில் சூட்கேஸ்களை திருடியதாக தினேஷ் சாவ்லா கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள விமான நிலைய போலீஸார், “சாவ்லா விமான நிலையத்தில் இருந்து 4000 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள 2 சூட்கேஸ்களை திருடிச் சென்று தன் காரில் வைத்துள்ளார். பின்னர் மீண்டும் விமான நிலையத்துக்குள் வந்து விமானம் ஏறிச் சென்றுள்ளார். அவரது காரில் இருந்து காணாமல்போன சூட்கேஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து மெம்பிஸ் திரும்பியபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்” எனக் கூறியுள்ளனர்.
போலீஸாரிடம் மாட்டிக்கொண்ட பின் தான் நீண்ட காலமாக இதுபோல திருடி வந்ததை தினேஷ் சாவ்லாவும் ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், “திருடுவது குற்றம் என எனக்குத் தெரியும். இருந்தாலும் த்ரில்லிங்கிற்காகவும், உற்சாகத்திற்காகவும் இதை செய்து வந்தேன்” எனக் கூறியுள்ளார்.
