‘போதையில் மனைவியுடன் தகராறு!’.. ‘அறைக்குள் சென்று பூட்டிக்கொண்ட கணவர்’.. காவலர்களின் சமயோஜிதத்தை ‘நேரில் அழைத்து பாராட்டிய’ காவல் ஆணையர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்ற கணவரை காப்பாற்றிய காவலர்களை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

சென்னை வீராபுரம் பகுதியை சேர்ந்த சிவா என்பவர் மதுபோதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஆத்திரத்தில் வீட்டின் அறைக்குள் சென்று உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டார் சிவா. இதனை கண்டதும் பதற்றமடைந்த சிவாவின் மனைவி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அப்போது அருகில் ரோந்து பணியில் இருந்த தலைமை காவலர் சரவணன் மற்றும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பிரிவைச் சேர்ந்த பாபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
அங்கு தனது அறையில் சிவா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை ஜன்னல் வழியாகப் பார்த்த காவலர்கள், உடனடியாக கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்து, தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த சிவாவை கீழே இறக்கி அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தற்கொலைக்கு முயன்ற ஒருவரின் உயிரை காப்பாற்றிய தலைமை காவலர் சரவணன் உட்பட அவருடன் சென்ற இருவரையும் காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி அளித்தார்.
