ஹெச்.ராஜா ஒரு அயோக்கியர்! மு.க.ஸ்டாலின் சர்ச்சைப் பேச்சு! முழு விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Arunachalam | Mar 29, 2019 10:34 PM
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசியவர், தமிழகத்தில் ஏன் இந்தியாவிலேயே இதுபோன்று ஒரு கடைந்தெடுத்த அயோக்கிய அரசியல்வாதியை நாம் இதுவரையில் பார்த்திருக்க முடியாது. இனிமேலும் பார்க்கவும் முடியாது.
மேலும், பாஜகவில் இருக்கக்கூடிய அனைவரையும் நான் சொல்லவில்லை. எனினும் அவர்களுடைய கொள்கையில் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அவர்கள் சொல்வதை நாங்கள் விமர்சிக்கலாம். அதுபோல் நாங்கள் சொல்வதை அவர்கள் விமர்சிக்கலாம், அது வேறு. அது அரசியல் பண்பாடு.
ஆனால், தமிழ் சமுதாயத்தின் நல்லிணக்கத்தை, நிம்மதியை கெடுக்கக்கூடிய வகையில் பேசுவது, வாய்க்கு வந்தபடியெல்லாம் உளறுவது, கலவரத்தை நடத்துவதற்குத் தூண்டுவது, கலவரத்தை நடத்துவது, பொய்களையே பேசிக் கொண்டிருப்பது, மற்றும் அவதூறு மட்டுமே பேசிக் கொண்டிருப்பது தான் ஹெச்.ராஜாவின் தொழிலாகவே இருந்து வருகிறது என்று மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.