‘10 வயது’.. ‘10 கிமீ’.. 25 ஆண்டு குற்றாலீஸ்வரன் சாதனை முறியடிப்பு.. சிறுவனுக்கு குவியும் பாராட்டுக்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Mar 29, 2019 04:44 PM
ஜஸ்வந்த் என்ற 10 வயது சிறுவன் 30 கிலோ மீட்டர் கடலில் நீந்திக் கடந்து சாதனை புரிந்தது அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.
தேனியை சேர்ந்த ரவிக்குமார்-தாரணி தம்பதியரின் மகனான ஜஸ்வந்த என்ற 10 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4 -ம் வகுப்பு படித்து வருகிறார். நீச்சலில் ஆர்வமுள்ள ஜஸ்வந்த தேனியில் விஜயக்குமார் என்ற பயிற்சியாளரிடம் கடந்த 3 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வருகிறார்.
மாவட்ட மற்றும் மாநில அளவில் நடந்த பல்வேறு நீச்சல் போட்டிகளில் ஜஸ்வந்த கலந்து கொண்டு நிறைய பரிசுகளை பெற்றுள்ளார். இதனை அடுத்து கடலில் நீந்துவதற்கான பயிற்சியையும் ஜஸ்வந்த மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் தலைமன்னார்-தனுஷ்கோடி இடையேயான 30 கி.மீ தூரத்தை நீந்திக் கடக்க இன்று 4 மணியளவில் தலைமன்னார் துறைமுகத்தில் இருந்து ஜஸ்வந்த் நீந்த துவங்கினார். இதனை அடுத்து பகல் 2.35 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் ஜஸ்வந்த் நீந்தி கரை ஏறினான். சுமார் 10.30 மணி நேரத்தில் நீந்தி இந்த சாதனை படைத்துள்ளார்.
இதன்மூலம் 25 ஆண்டுகால குற்றாலீஸ்வரன் சாதனையை சிறுவன் ஜஸ்வந்த் முறையடித்துள்ளார். குற்றாலீஸ்வரன் தனது 12 -வது வயதில் இந்த தூரத்தை 16 மணி நேரங்களில் கடந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
சாதனை புரிந்த சிறுவன் ஜஸ்வந்திற்கு ரயில்வே காவல் பிரிவு டி.ஜி.பி சைலேந்திரபாபு, இந்திய கடலோரக் காவல்படை அதிகாரிகள், பயிற்சியாளர் விஜயக்குமார் மற்றும் ஊர் மக்கள், சுற்றுலா பயணிகள் என அனைவரும் பரிசளித்து பாரட்டியுள்ளனர்.