புத்தாண்டு கொண்டாட்டம்: மெரினா உள்ளிட்ட 'சென்னையின்' முக்கிய இடங்களில்... 'வாகனங்கள்' நுழையத்தடை... விவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Dec 30, 2019 04:01 PM

புத்தாண்டை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட முக்கிய இடங்களில், வாகனங்கள் நுழைய தடை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

New Year 2020: Tomorrow onwards Vehicles not allowed in Marina Beach

நாளை மறுநாள் புத்தாண்டு பிறக்கிறது. இதையொட்டி சென்னை முழுவதும் சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மதுபோதையில் இளைஞர்கள் அத்துமீறுவதை தடுக்கவும், ரேஸ்  கொண்டாட்டங்களை தடுக்கவும் சுமார் 350 இடங்களில் வாகன சோதனை நடைபெறவுள்ளது.

பெண்களிடம் அத்துமீறுபவர்களை தடுக்க, சென்னை மெரினா கடற்கரையில் பைனாகுலர் வைத்து கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. மெரினா, எலியட்ஸ் உள்ளிட்ட கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டும் என்பதால் நாளை இரவு 8 மணியில் இருந்து காலை 4 மணிவரை மெரினா கடற்கரையில் வாகனங்கள் நுழையத்தடை விதிக்கப்பட்டு உள்ளது.

8 மணிக்கு பிறகு கடற்கரை உட்புற சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் கலங்கரை விளக்கத்தின் அருகில் உள்ள வழியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. மெரினா காந்தி சிலையில் போர் நினைவு சின்னம் வரையில் நாளை இரவு 8 மணியில் இருந்து மறுநாள் காலை 4 மணி வரையில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

ரிசர்வ் வங்கி சுரங்க பாதை மற்றும் வாலாஜா சாலை சந்திப்பில் இருந்து போர் நினைவு சின்னம் வழியாக வரும் வாகனங்கள் நாளை இரவு 8 மணிக்கு பிறகு கொடிமர சாலை வழியாக திருப்பி விடப்படும். டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, லாயிட்ஸ் ரோடு, பெசன்ட் ரோடு, வாலாஜா ரோடு, பாரதி சாலை ஆகிய இடங்களில் இருந்து வரும் வாகனங்களும் மெரினா காமராஜ் சாலைக்கு செல்வதற்கு அனுமதி கிடையாது.

அடையாறில் இருந்து மெரினா நோக்கி வரும் வாகனங்கள் கச்சேரி ரோடு- சாந்தோம் ரோடு சந்திப்பில் இருந்து திருப்பி விடப்படும். நாளை இரவு எந்த வாகனங்களும் மெரினா காமராஜ் சாலை செல்வதற்கு அனுமதி இல்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எலியட்ஸ் கடற்கரையில் 6-வது அவென்யூவில் நாளை இரவு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.