இவ்ளோ சொல்லியும் 'அடங்க' மாட்றாங்களே... யாருப்பா 'அந்த' 24 பேரு?... தட்டித்தூக்க 'ஸ்கெட்ச்' போட்ட போலீஸ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Dec 26, 2019 11:18 PM

சிறுவர்-சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பார்ப்பதில் தமிழகம் குறிப்பாக சென்னை முதலிடத்தில் இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து மத்திய அரசு அளித்த தகவலின்படி சுமார் 5000 பேர் இந்த வீடியோக்களை பார்த்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Child Pornography Issue: Police Identified 24 persons

இதனால் தமிழக அளவில் பெரும் அதிர்வுகள் ஏற்பட்டது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள், மாணவிகள், அரசியல்வாதிகள், இளைஞர்கள் ஆகியோர் இந்த பட்டியலில் இருப்பதாகவும் அவர்களுக்கு விரைவில் இதுதொடர்பாக நோட்டிஸ் அனுப்பப்படும் என்றும் சென்னை குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் யாருக்கும் கால் செய்து பேச மாட்டார்கள் என்றும் கூறினர். தொடர்ந்து திருச்சியில் சிறுவர்-சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை அனுப்பிய இளைஞர் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் கல்லூரி விழாவொன்றில் பேசிய கூடுதல் டி.ஜி.பி.ரவி சென்னை போலீசாரிடம் ஆபாச படங்கள் பார்த்த 30 பேரின் பட்டியல் கொடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.  இதனையடுத்து சென்னை போலீசில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவில் துணை கமி‌ஷனராக இருக்கும் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் 30 பேரையும் பிடிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கினர்.

அதில் 24 பேர் குறித்த தகவல்கள் கண்டறியப்பட்டு அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் பாதி பேர் சென்னைக்கு வெளியில் இருப்பது போலவும், ஒருசிலர் மேற்கு வங்காளத்தில் இருப்பது போலவும் செல்போன் சிக்னல் காட்டியுள்ளது.

இதுகுறித்து துணை கமிஷனர் ஜெயலட்சுமி,''ஐபி அட்ரஸை வைத்து 24 பேரை கண்டுபிடித்து உள்ளோம். விரைவில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்,'' என தெரிவித்து இருக்கிறார். இதனால் கலக்கத்தில் இருக்கும் இளைஞர்கள் தங்களது செல்போனில் உள்ள ஆபாச படங்களை அழித்து வருகின்றனர். எனினும் இணையத்தில் புகுந்து ஆபாச படங்களை பார்த்தவர்கள் தப்ப முடியாது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.

 

Tags : #POLICE