‘பணமழை’ பொழிந்து ‘கிறிஸ்துமஸ்’ கொண்டாடிய நபர்... ‘ஆசையாக’ எடுத்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி ‘ட்விஸ்ட்’...
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | Dec 26, 2019 01:34 PM
மக்கள் கூடியிருந்த பகுதியில் பணத்தை வீசி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூறிய முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள அகாடமி வங்கிக்குள் நேற்று முன்தினம் புகுந்த நபர் ஒருவர் தன்னிடம் பயங்கர ஆயுதம் இருப்பதாகக் கூறி ஊழியர்களை மிரட்டியுள்ளார். பின்னர் வங்கி கருவூலத்தில் இருந்த பல லட்சம் டாலர்களை கொள்ளையடித்துவிட்டு அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். கொள்ளையடித்த பணத்துடன் வெளியே வந்த அவர், மக்கள் அதிகமாக கூடியிருந்த இடத்திற்கு சென்று பணத்தை அள்ளி வீசியுள்ளார். மேலும் பணத்தை வீசும்போது அவர், “எல்லோரும் சந்தோஷமாக கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள்” எனக் கூறியுள்ளார். இதையடுத்து முதியவர் ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக் கூறி பணத்தை வீசுவதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் போட்டி போட்டுக்கொண்டு அதை எடுத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து வங்கிக் கொள்ளை தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டிருந்த போலீசார் இதைப் பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அங்கு சென்ற போலீசார், ஹோட்டல் ஒன்றில் காபி குடித்துக் கொண்டிருந்த அந்த முதியவரைக் கைது செய்துள்ளனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பெயர் டேவிட் ஆலிவர் என்பதும், அனைவரும் சந்தோஷமாக கிறிஸ்துமஸ் கொண்டாட வேண்டும் என அவர் வங்கியில் கொள்ளையடித்ததும் தெரியவந்துள்ளது. அதன்பிறகு போலீஸ் விசாரணைக்கு பயந்து சிலர் எடுத்த பணத்தை வங்கியில் திருப்பித் தந்துள்ள நிலையில், இன்னும் பல லட்சம் டாலர்கள் வந்து சேரவில்லை எனக் கூறப்படுகிறது.