'பிளான் போட்டு பல பேரிடம் திருடியாச்சு'...'சிறுவனிடம் ஏமாந்த திருடன்'...வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Dec 25, 2019 12:14 PM
ஏடிஎமில் பணம் எடுக்க வருவோரின் கவனத்தை திசை திருப்பி, அவர்களின் பணத்தை கொள்ளையடிக்கும் திருடனின் வீடியோவை காவல்துறையினர் வெளியிட்டுள்ளார்கள்.
ராமநாதபுரம் காவல்துறை சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அது காண்போருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஏடிஎம் மையம் ஒன்றில் நன்றாக உடை அணிந்து கொண்ட நபர் ஒருவர் பணம் எடுத்து கொண்டு இருக்கிறார். பணத்தை எடுத்த பின்பு ஏடிஎம் மையத்தை விட்டு வெளியே செல்லாமல் உள்ளேயே சிறுது நேரம் நின்று கொண்டு இருக்கிறார். அப்போது பெண் ஒருவர் பணம் எடுப்பதற்காக உள்ளே வருகிறார்.
அந்த நேரத்தில் அந்த பெண்ணிற்கு உதவுவது போல நடித்து, அந்த பெண்ணின் ஏடிஎம் கார்டை வாங்கி, பணத்தை எடுப்பதற்கான வழிமுறையை செய்யாமல், கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என பார்க்கிறார். அப்போது கணக்கில் பணம் குறைவாக இருப்பதை அறிந்த அந்த நபர், எந்த மோசடியும் செய்யாமல் பணத்தை எடுத்து கொடுக்கிறார்.
அந்த பெண்ணை தொடர்ந்து வேறு இரு இளைஞர்கள் பணத்தை எடுக்க வருகிறார்கள். அவர்களுக்கும் உதவுவது போல நடித்து, ஏடிஎம் கார்டை வாங்கி பணத்தை எடுத்து கொடுக்க முயற்சி செய்து விட்டு, இறுதியில் தான் மறைத்து வைத்திருக்கும் போலி ஏடிஎம் கார்டை அந்த இளைஞர்களிம் கொடுத்து விடுகிறார். அந்த இளைஞர்களும் அந்த நபர் கொடுத்த கார்டை சோதிக்காமல் எடுத்து சென்று விடுகிறார்கள்.
இந்நிலையில் சிறுது நேரம் கழித்து சிறுவனுடன் அவனது தந்தை பணத்தை எடுக்க ஏடிஎம் மையத்திற்கு வருகிறார்கள். அப்போது தனது பழைய தந்திரத்தை பயன்படுத்தி, பணம் எடுக்க வந்தவரின் கார்டை மாற்ற முயற்சிக்கிறார். ஆனால் அந்த சிறுவன் தனது தந்தையின் ஏடிஎம் கார்டை பார்த்து கொண்டே இருந்ததால், அந்த மோசடி நபரால் ஏடிஎம் கார்டை மாற்ற முடியவில்லை. இந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
மோசடி தொடர்பான வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ள ராமநாதபுரம் காவல்துறை, இந்த நபர் குறித்த தகவல் தெரிந்தால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கைபேசி எண்ணிற்கு (9489919722) தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.