'டாட்டூ'வால் சந்தேகம்... 6 வருடங்களுக்குப்பின்... வீடு 'திரும்பிய' சென்னைப் பெண்ணுக்கு... நேர்ந்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Dec 26, 2019 03:38 PM

மனம்மாறி 6 வருடங்களுக்குப்பின் வீடு திரும்பிய, சென்னைப்பெண்ணுக்கு கணவரால் நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Husband killing his wife in Puzhal, Police Investigate

புழல் பகுதியில் உள்ள திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் வெற்றிவீரன்(48). பாடியில் உள்ள தனியார் அச்சகத்தில் வேலைபார்த்து வந்துள்ளார். இவரது மனைவி சஜனி(38) இவர்களுக்கு கல்லூரி படிக்கும் வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். வெற்றிவீரன்-சஜனி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதால் 6 வருடங்களுக்கு முன் சஜனி கணவரைப் பிரிந்து கோயம்புத்தூர் சென்று விட்டார். 15 நாட்களுக்கு முன் வெற்றிவீரன் கோயம்புத்தூர் சென்று சஜனியை சமாதானம் செய்து அழைத்து வந்துள்ளார்.

இருவரும் மகள்களுடன் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். தொடர்ந்து மகள்கள் இருவரும் கல்லூரிக்கு சென்றவுடன் வெற்றிவீரன்-சஜனி இருவருக்கும் நேற்றிரவு சண்டை ஏற்பட்டுள்ளது. விடிய,விடிய நடந்த இந்த சண்டையில் ஆத்திரமடைந்த வெற்றிவீரன் கத்தியால் சஜனியை குத்தி கொலை செய்துவிட்டு புழல் காவல்நிலையத்தில் இன்று காலை சரணடைந்து உள்ளார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''வெற்றிவீரன்-சஜனி இருவரும் காதலித்து 21 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இருவருக்கும் கல்லூரி செல்லும் வயதில் 2 மகள்கள் உள்ளனர். சஜனி அழகுக்கலை நிபுணராக வேலைபார்த்து வந்துள்ளார். நன்றாக சென்றுகொண்டிருந்த இவர்கள் குடும்ப வாழ்க்கையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டது.

இதனால் குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்று கருதிய சஜனி 6 வருடங்களுக்கு முன் தன்னுடைய தாய்வீடான கோயமுத்தூருக்கு சென்று விட்டார். தொடர்ந்து 15 நாட்களுக்கு முன் வெற்றிவீரன் கோயமுத்தூர் சென்று சஜனியை சமாதானம் செய்து அழைத்து வந்துள்ளார். நேற்றிரவு இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த வெற்றிவீரன் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு, காவல்நிலையத்தில் சரணடைந்து விட்டார்,'' என்றனர்.

போலீஸ் விசாரணையில் வெற்றிவீரன்,'' சஜனி அழகாக இருப்பார். அதனால் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். என்னைவிட்டு பிரிந்து சென்றபின் அவர் உடலில் டாட்டூ போட்டுள்ளார். அதுகுறித்து விசாரித்தபோது தான் எங்கள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது,'' என தெரிவித்து இருக்கிறார்.

மனைவியை கொலை செய்வதற்காகவே வெற்றிவீரன் மீண்டும் சஜனியை அழைத்து வந்தாரா? என்ற ரீதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப்பின் வெற்றிவீரனை சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்த்துள்ளனர். இந்த சம்பவம் புழல் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.